×

மோடியை எதிர்க்கும் சீனர்கள்: சீனாவில் அல்ல கொல்கத்தாவில்...

இந்தியாவில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரம் கொல்கத்தா. 18ம் நூற்றாண்டில், தோல் வியாபாரம், ஓட்டல் வியாபாரம் செய்வதற்காக சீனாவில் இருந்து கொல்கத்தாவுக்கு பலர் குடிபெயர்ந்தனர். இதனால், அங்கு சீன வம்சாவளியினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20,000 ஆக இருந்தது. நாளடைவில் பலர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மாறிவிட்டனர். தற்போது கூட கொல்கத்தாவில் சுமார் 5,000 சீனர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 2,000 பேருக்கு ஓட்டுரிமை கூட இருக்கிறதாம். ஆனால், எந்த தேர்தலிலும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. பரபரப்பான தேர்தல் நேரத்தில் சாதாரணமாகவே இருந்து வந்தனர்.
ஆனால், இம்முறை முதல் முறையாக தேர்தல் திருவிழாவில் சீனர்களும் இணைந்துள்ளனர். அவர்களின் வீடு, கடைகளில் தேர்தல் பிரசார வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதுவும், சீனாவின் தேசிய மொழியான மான்டரின் மொழியில். சுவர் பிரசாரங்கள் களை கட்டுகின்றன.

ஒட்டு மொத்த சீனர்களும் யாருக்கு சப்போர்ட் செய்கிறார்களோ இல்லையோ, பாஜ.வுக்கு எதிரான கொள்கையில் வலுவாக இருக்கிறார்கள். சுவர்களில், பிரதமர் மோடியை ‘காவலாளி’ வேடத்தில் வரைந்து, அருகிலேயே விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் கிங்பிஷர் விமானத்தில் டாட்டா காட்டிவிட்டு செல்வது போல வரைந்திருக்கிறார்கள். பொதுவாக இவர்களின் ஆதரவு ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்குதான் இருக்கிறது. அக்கட்சியின் நிறமான வெள்ளை, நீல நிறத்தில் சீனர்களின் வீடுகள் ஜொலிக்கின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் தெற்கு கொல்கத்தா தொகுதி வேட்பாளர் மாலா ராய் படங்களை வரைந்து, ‘திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள்’ என மான்டரின் மொழியில் எழுதி உள்ளனர். திரிணாமுல் காங்கிரசுக்காக பல்வேறு பிரசாரத்திலும் சீன வம்சாவளியினர் தாமாக முன்வந்து பங்கேற்கின்றனர். ‘‘கட்சியிலிருந்து யாரும் வந்து அவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களாகவே ஆர்வமுடன் வந்து பிரசாரத்தில் பங்கேற்று கட்சிக்காக பொதுமக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள்’’ என்கிறார் திரிணாமுல் வேட்பாளர் மாலா ராய்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinese ,Modi ,China ,Kolkata , Modi, Chinese, China, Kolkata
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...