×

ஆவணங்கள் உள்ள நகைகளை பறிமுதல் செய்ய பறக்கும் படையினருக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இருந்தும் தங்களிடம் நகைகளை பறிமுதல் செய்வதற்கு தடை கோரி நகை வியாபாரிகள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை தங்க நகை வியாபாரிகள் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம், கோவை தங்கநகை செய்வோர் சங்கம் ஆகியவை தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து,  சாலையில் செல்லும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்கின்றனர். அப்போது, உரிய ஆவணங்கள் இருந்தும் தங்க நகை செய்யும் தொழிலில் உள்ள  எங்கள் சங்க உறுப்பினர்களின் வாகனங்களில் எடுத்துச் செல்லும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பறக்கும் படையில்  இல்லாத போலீசாரும் வாகனங்களை சோதனை செய்து தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்திறார்கள். இந்த நகைகளை திரும்ப பெற மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலை உள்ளது.

இதனால், தங்க நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் நகைகளை பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படையினருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவணங்களை காட்டினால் அந்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்வர். சரியான ஆவணங்கள் இருந்தால் ஒரே நாளில் நகைகளை திரும்பப்பெறலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இந்த மனு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனு அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,troops , Petition requested , prohibit flying troops,seize jewelry in documents
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...