முன்னாள் முதல்வர் என்டிஆரின் 2வது மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் தொல்லை புகார் : ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆரின் 2வது மனைவி லட்சுமி பார்வதி மீது அவரது உதவியாளர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் 2வது மனைவி லட்சுமி பார்வதி மீது அவரது உதவியாளர் கோட்டி நேற்று முன்தினம் குண்டூர் மாவட்டம் வெனுகொண்டா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், கடந்த 5 ஆண்டு காலமாக உதவியாளராக வேலை செய்யும் தன்னை லட்சுமி பார்வதி கடந்த சில காலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி இருக்கிறார். தனது புகாருக்கு ஆதாரமாக லட்சுமி பார்வதி, தனக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய தகவல்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தயாரிப்பில் `லட்சுமிஸ் என்டிஆர்’’ என்னும் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், லட்சுமி பார்வதியை  என்டிஆர் 2வது  திருமணம் செய்த பிறகு, அவரை ஆந்திர மாநில முதல்வரும் என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தி,  துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது போல் படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது.  

தேர்தல் நேரத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று தெலுங்கு தேசம் கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆந்திராவில் மட்டும் படம் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி இந்த படம் மற்ற மாநிலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், என்டிஆருக்கு இறுதி காலத்தில் லட்சுமி பார்வதி எந்த அளவிற்கு உதவியாக இருந்தார் என்பது காட்டப்படுகிறது. தற்போது தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் லட்சுமி பார்வதி மீது அவரது உதவியாளர் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்திருப்பது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினரின் வற்புறுத்தலின் பேரிலேயே  லட்சுமி  பார்வதிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெண்ணுக்கு பாலியல் தொல்லை