×

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 198 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி: கடந்த தேர்தலைவிட இம்முறை இருமடங்கு உயர்வு!

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் வீட்டு உபயோக பொருட்களையே சின்னங்களாக பெற்றுள்ளனர். ஒவ்வொரு தேர்தல் சீசனிலும் புதிய கட்சி மற்றும் சின்னங்கள் அறிமுகமாகி வருகின்றன. இதனால் வேட்பளர்கள் கேட்கும் சின்னத்தை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்திற்கு கடும் சவாலாகவே இருக்கிறது. தேர்தல் நடப்பதற்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த முறை மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 198 சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 87 சின்னங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த முறை சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் இந்த முறை போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்கள், தொலை தொடர்பு சாதனங்கள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில், குளிர்சாதனப்பெட்டி, டார்ச் லைட், சப்பாத்தி கட்டை, எரிவாயு அடுப்பு, தேநீர் கோப்பை உள்ளிட்ட பொருட்களே அதில் அதிகம் இடம் பெற்றுள்ளன. வேட்பாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் 530 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் கரூர் தொகுதியில் அதிகப்படியாக 33 சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள். அவர்களுக்கு தொலைபேசி, மின்கம்பம், காலிபிளவர், கப் அண்ட் சாசர், பொரிக்கும் சட்டி, வேர்க்கடலை, செருப்பு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு அடுத்தபடியாக தென்சென்னையில் போட்டியிடும் 31 சுயேச்சை வேட்பாளர்களுக்கு கம்ப்யூட்டர், கத்தரிக்கோல், குக்கர், விசில் உள்ளிட்ட சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. சின்னங்களுக்கு வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வேட்பாளர்கள் கருதுவதால் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வீட்டு உபயோக பொருட்களையே பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 198 Independents Competition ,country ,Lok Sabha ,election , Lok Sabha election, Independent candidate, increase
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...