×

தூத்துக்குடி கடற்கரையில் காயங்களுடன் திமிங்கல சுறா கரை ஒதுங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் உடலில் காயங்களுடன் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா இறந்தது. மன்னார் வளைகுடா பகுதிகளில் திமிங்கல சுறா, பால் சுறா, ஈட்டிபல் சுறா, கங்கை சுறா, சிறு பல் சுறா உள்ளிட்ட பல்வேறு வகை சுறா இனங்கள் வசிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அரிய வகை மீனினங்களாகும். இவற்றை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரியது திமிங்கல சுறாவாகும். இது அதிக பட்சமாக 65 அடி நீளம் வரை வளரக்கூடியது. மீனவர்கள் இதனை அம்மனி உலுவை என அழைக்கின்றனர்.

தூத்துக்குடி இனிகோநகர் கடற்கரையோரத்தில் நேற்று முன்தினம் இரவு உயிருக்கு போராடிய நிலையில் ஒரு திமிங்கல சுறா சுற்றி வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் நீந்த முடியாத அந்த சுறா கரை ஒதுங்கியது. அதன் உடலில் பக்கவாட்டு பகுதி மற்றும் கீழ் பகுதியில் காயங்கள் இருந்துள்ளன. காலை நேரத்திற்கு பின்னர் அந்த திமிங்கல சுறா உயிரிழந்துள்ளது. தகவலறிந்த வனத்துறையின் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அதிகாரிகள் மற்றும் மீன்வளக்கல்லூரி பேராசிரியர்கள் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ராட்சத பெண் திமிங்கல சுறா சுமார் 18 அடி நீளமும் ஒன்றரை டன் எடையும் கொண்டதாக உள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் உதவியுடன் அந்த திமிங்கல சுறா கடற்கரையில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அதன் ஒரு சில பாகங்கள் மட்டும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில்: கடல் பரப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே இந்த வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கும். ஆனால் இந்த மீனின் உடலில் அடிபட்ட காயங்கள் இருக்கின்றன. இதனால் பெரிய கப்பல் ஏதேனும் மோதி காயமடைந்து இருக்கலாம் என்றும் அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கி இறந்திருக்கலாம் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coast ,Thoothukudi , Thoothukudi, beach, whale shark
× RELATED சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்