ஏப்ரல் 12ம் தேதி தேனி தொகுதிக்கு வருகை தருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தகவல்

தேனி: ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேனி மாவட்டத்திற்கு வருகை தருவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தகவல் அளித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என தகவல் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல்18ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, காங்கிரஸ், ம.நீ.ம, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகிறது. முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருபுறம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 12ம் தேதி ராகுல் காந்தி தேனி தொகுதிக்கு வருகை தருகிறார். முன்னதாக தேனி மாவட்டம் போடியில் பேருந்து நிலையம் எதிரே திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பணி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது, இத்தேர்தல் வெற்றி என்பது இளங்கோவன் என்ற தனி நபருக்கு கிடைக்கும் வெற்றி இல்லை. ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் கிடைக்கப் போகும் மிகப்பெரிய வெற்றியாகும். கிராம மக்களின் அன்றாடத் தேவைகளான சமையல் எரிவாயு, கேபிள் டிவி கட்டணம் உள்ளிட்டவற்றின் உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்களை மக்களிடையே எடுத்துக் கூறி, திண்ணை பிரச்சாரம் செய்தால், அதுவே மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும் என்று கூறினார். மேலும் என் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன். இப்பகுதியிலேயே தங்கி பணியாற்றுவேன். அடுத்த 5 ஆண்டுகளில் தேனி தொகுதியில் புதிய திட்டங்கள் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதிகளை கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,Congress ,party ,EKKS Ilangovan , Theni constituency,Rahul Gandhi, visit, EVKS Mr
× RELATED இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய பாஜக...