×

சில தொகுதிகளில் மஜத-காங்கிரசார் மோதல் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜ முடிவு: ஆர்.எஸ்.எஸ். களமிறங்கியதால் பரபரப்பு

பெங்களூரு: மண்டியா மற்றும் மைசூரு மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அதை சாதகமாக வைத்து கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜ முடிவு செய்துள்ளது. இதையொட்டி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நேரடியாக களமிறங்கியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில பேரவை தேர்தலில் பாஜவுக்கு 104 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது. பாஜ தலைவர் எடியூரப்பா எவ்வளவோ முயன்றாலும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. ஆபரேஷன் தாமரை திட்டத்தின் கீழ் பலருக்கு வலை விரித்தாலும் அதிலும் பாஜவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கடைசியாக ஆறுதல் வெற்றியாக கல்புர்கியில் டாக்டர் உமேஷ்ஜாதவ் பாஜவின் பக்கம் வந்துள்ளார். கல்புர்கி எம்பி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போட்டியாக தற்போது உமேஷ் ஜாதவ் களத்தில் நிற்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில் பாஜ வேட்பாளர்களின் வெற்றிக்காக அக்கட்சி மேலிடம் புதிய வியூகம் அமைத்துள்ளது. மண்டியா, மைசூருவில் கூட்டணி கட்சிகள் இடையே பிரச்னை வெளிப்படையாக வெடித்த நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு பாஜ முடிவு செய்துள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்டுள்ள விரிசல்களை மேலும் பெரிதாக்கி அதில் குளிர்காய்வதற்கான நடவடிக்கையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் களத்தில் நேரடியாக இறங்கி வேலை செய்ய தொடங்கி விட்டனர்.
பாஜ மேலிடத்தின் இந்த முடிவு பல்லாரி, கொப்பள் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மக்களவை தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கை மாநில பாஜ தலைமைக்கு அமித்ஷா நிர்ணயம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் வெற்றியின் மூலம் மாநில கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கவும் அமித்ஷா திட்டம் வகுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரம் மூலமாக தகவல்கள் கிடைத்துள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வினி அனந்தகுமாருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் பாஜவில் அதிருப்தி வெடித்தது. இதைத்தொடர்ந்து தேஜஸ்வி சூரியாவுக்கு ஆதரவாக அமித்ஷா ரோடு ஷோ நடத்தி அதிருப்தி நிர்வாகிகளை சமாதானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,coalition government ,Congress ,constituencies , BJP, Mjd, Congress, RSS,
× RELATED மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில்...