×

முழு மாநில அந்தஸ்து விவகாரம் ஆம் ஆத்மி - பாஜ டிவிட்டரில் மோதல்

புதுடெல்லி: மாநில முழு மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆம் ஆத்மி, பாஜ கட்சிகள் டிவிட்டர் சமூக வலைதளத்தில் சகட்டு மேனிக்கு மோதி வருவது அரசியல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. டெல்லி முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், முழு அந்தஸ்து பெற வேண்டும். முழு அந்தஸ்து பெற்றால், இரு ஆண்டுகளில் டெல்லி ஜப்பான், லண்டன் நகருக்கு நிகராக வளர்ச்சி அடையும் என மக்களவை தேர்தல் பிரசார மேடைகளில் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் முழங்கி வருகிறார். முழு மாநில அந்தஸ்துக்கு துடைப்பம் சின்னத்தை தேர்வு செய்யுங்கள் என வாக்காளர்களிடம் தீவிர வேட்டையாடலை அவரது கட்சி நடத்தி வருகிறது. இதனிடையே, முழு மாநில அந்தஸ்துக்காக டெல்லியில் தலைவர்கள் ஆதரவு திரட்டாமல், பிற மாநில தலைவர்களின் ஆதரவை கெஜ்ரிவால் எதிர் நோக்கி உள்ளார் என மத்திய அமைச்சரும் பாஜ முன்னணி தலைவர்களில் ஒருவருமான விஜய் கோயல் தனது டிவிட் பதிவில் காட்டம் தெரிவித்து இருந்தார். 20 ஆண்டு டெல்லி அரசியலில் முழு அந்தஸ்து குறித்து தீவிரம் செலுத்தியோ அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்தோ ஒரு போதும் குரல் கொடுக்காதவர் இப்போது மேற்குவங்க முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி. அவரிடமும், கோர்த்த கைகளை உயர்த்தி கோஷமிடும் கூட்டனி கட்சி தலைவர்களிடமும், முழு மாநில அந்தஸ்துக்கு ஆதரவு திரட்டுவாரா கெஜ்ரிவால்? என சரமாரி கேள்வியும் கோயல் எழுப்பி இருந்தார்.

எதிர்க்கட்சிகளை தாக்கியும் தனது பிரசாரத்தில் அனல் கக்கி வரும் கெஜ்ரிவால், கோயலின் கேள்விக்கு பதில் டிவிட் செய்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சாதனைகளை முன்னிலை படுத்தி, ஓட்டு சேகரிக்கும் பாஜவினர், மறைந்த பிரதமரின் கனவுகளை நனவாக்குவதில் முற்றிலும் கோட்டை விட்டுள்ளனர் என தனது டிவிட்டர் பதிவில் கெஜ்ரிவால் சாடியுள்ளார். முழ் மாநில அந்தஸ்து விவகாரத்தில் டெல்லிவாசிகளுக்கு பாஜ துரோகம் இழைத்துள்ளது எனவும் அவர் தாக்கியுள்ளார். அதோடு, மாநில முழு அந்தஸ்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தவர் மாஜி பிரதமர் வாஜ்பாய் என்பதையும் கோயலுக்கு எடுத்துரைத்து உள்ள கெஜ்ரிவால், ‘‘மாஜி பிரதமரின் அஸ்தியை கடலிலும், ஆறுகளிலும் கரைப்பதற்காக நாடு முழுவதும் வலம் வந்த பாஜ, அவரது கனவை நனவாக்காமல் இருக்கிறது’’, என குட்டு வைத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : battle ,AAP , AAP, BJP, Twitter
× RELATED பிரதமர் நரேந்திர மோடி குறித்து...