×

தாம்பரத்துல ‘தல காட்ட’ முடியல: தவிக்கும் பெரும்புதூர் பாமக வேட்பாளர்

சென்னை: மேற்கு தாம்பரத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காததை அறிந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்ததால் பெரும்புதூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் எஸ்கேப் ஆனார். மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள மலை ஓரம் புலிகொரடு என்னும் பகுதி அமைந்துள்ளது.  இது தாம்பரம் நகராட்சியின் 38 வார்டின் ஒரு பகுதி ஆகும். இந்த வார்டில் புலிகொரடு, வெட்டியாங்குண்டு, குண்டுமேடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாலை மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பல அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பொதுமக்களை அலட்சியப்படுத்தி வந்தனர்.
 
இதனால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அடிப்படை வசதிகளை செய்தி கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், அவ்வாறு செய்து கொடுக்கவில்லை என்றால் வருகின்ற மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் ஓட்டு சேகரிக்க பெரும்புதூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிப்பதற்கு முடிவு செய்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேட்பாளர் வைத்தியலிங்கம் அங்கு சென்றால் பொதுமக்களுக்கு பதிலளிக்க முடியாமல் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என கருதி அப்பகுதிக்கே செல்லாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். வேட்பாளருக்காக நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் அவர் வராததால் அதிருப்தியடைந்தனர். மேலும் வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்கவேண்டும் என தங்கள் பகுதி பொதுமக்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக கூறினர்.

பதிலளிக்க முடியாமல் திணறல்..!

பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் தாம்பரம் ரங்கநாதன் பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஜீப்பில் இருந்து கீழே இறங்கும்படி பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்  வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து பொதுமக்களிடம் பேசினார். அப்போது  அவரிடம்,  ‘’தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 7,9 ஆகிய வார்டுகளில்  உள்ள ஜாகீர் உசேன் தெரு, அண்ணா தெரு, ஜீவா தெரு மற்றும் ரங்கநாதபுரம் 5வது  தெரு, 6வது தெரு, 7வது தெருக்களில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 500க்கும்  மேற்பட்டவர்கள் வசிக்கின்றோம். இந்த இடம் வருவாய்த்துறை  பதிவேட்டில் காப்பு காடு என பதிவாகி உள்ளது.

இப்பகுதிகள் அடங்கிய சர்வே எண்  392/1சி,12.07 ஏக்கர் நிலப்பரப்பை குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு செய்து  வருவாய்த் துறை பதிவேட்டில் காப்பு காடுகள் என பதிவாகி உள்ளதில் இருந்து  விலக்களித்து 1955ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  அரசாணை  செயல்படுத்தப்படாததால் தற்போது வரை மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. இதனால்  பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றோம்’’ என கூறி கோரிக்கை மனு ஒன்றை  அளித்தனர். இதில் என்ன செய்வது என்று திணறிய பாமக வேட்பாளர்  பின்னர் வாகனத்தில் ஏறி தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக முதல்வரிடம் பேசி 3 மாதங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறிவிட்டு  அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamparathu ,candidate candidate , Thambaram, Perumpudur, PM candidate
× RELATED திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக...