×

மோடிக்கு அத்வானி பகிரங்க எச்சரிக்கை: கடந்த காலத்தை மறந்துவிடாதீர்கள்.., ஜனநாயகத்தை குலைத்து விடாதீர்கள்

புதுடெல்லி: பாஜ.வில் பிரதமர் மோடியால் ஓரம்கட்டப்பட்டு உள்ள மூத்த தலைவர் அத்வானி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மவுனத்தை அதிரடியாக கலைத்துள்ளார். ‘கடந்த காலத்தை மறந்து விடாதீர்கள்; கட்சியில் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடாதீர்கள்’ என மோடிக்கு அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, பாஜ.விலும் தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   பாஜ.வை நிறுவிய மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே.அத்வானி. 2 எம்பி.க்களை பெற்றிருந்த கட்சியை, மத்தியில் ஆட்சியில் அமரும் அளவுக்கு வளர்த்தவர். அதற்காக, கடுமையாக உழைத்தவர். கட்சியின் வளர்ச்சிக்காக இவர் நடத்திய ரத யாத்திரை மிகவும் புகழ் பெற்றது. தீவிரமான இந்துத்துவா கொள்கையை கொண்டவர். இதனால், இவர் தீவிர இந்து உணர்வாளராக பார்க்கப்பட்டார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதியை இடித்தது உட்பட பல வழக்குகளை கட்சியின் வளர்ச்சிக்காக சந்தித்தவர்.  அதுவே, அவருடைய பிற்கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு  முட்டுக்கட்டைகளுக்கு காரணமாகவும் அமைந்தது. தனக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்த போதிலும், மூத்த தலைவரான வாஜ்பாய்க்கு அதை விட்டு கொடுத்து விட்டு, அவருக்கு கீழ் துணைப் பிரதமராக அமர்ந்தவர்.  பாஜ.வில் பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் விஸ்வரூப வளர்ச்சியை பெற்ற பிறகு, அத்வானியின் அரசியல் வாழ்க்கை சூன்யமானது. கட்சியின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்காக உழைத்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஸ்வந்த் சின்கா உட்பட கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். அவர்களுக்கு கட்சியில் இருந்த முக்கியத்துவம் பறிக்கப்பட்டது. 2014 தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் பதவியை ஏற்றார்.

 இதைத் தொடர்ந்து, கட்சிக்காக அத்வானி செய்த தியாகத்துக்கும், சேவைக்கும் மரியாதை அளிக்கும் வகையில், அவருக்கு ஜனாதிபதி பதவி அளிக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால், அப்பதவிக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. அந்த கவுரவம் ராம்நாத் கோவிந்துக்கு–்் வழங்கப்பட்டது. இது, அத்வானிக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாக கருதப்பட்டது. அத்வானியை ஒரு காலக்கட்டத்தில் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு அதிர்ச்சி அடைந்தன.  மேலும், கட்சியின் சார்பிலும், அரசின் சார்பிலும் நடந்த நிகழ்ச்சிகளில் அத்வானியை மோடி மிகவும் மோசமான வகையில், பகிரங்கமாக அவமதித்த பல்வேறு சம்பவங்கள்  நடந்தன. அத்வானிக்கு நடக்கும் இந்த அவமதிப்புகள், மக்கள் உட்பட எல்லா மட்டத்திலும் வருத்தத்தை அளித்தது.

தற்போது, அனைத்து கட்சிகளுக்கும் இணக்கமான, அனைவராலும் மதிக்கப்படும் ஒரு மூத்த தலைவராக அத்வானி இருக்கிறார். இருப்பினும், மோடியும் அமித்ஷாவும் மட்டும் அவரை தொடர்ந்து அவமதிப்பதும், மட்டம் தட்டுவதும் தொடர்கிறது.  தற்போது 91 வயதாகும் அத்வானி, குஜராத்தில் உள்ள காந்தி நகர் மக்களவை தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது, அவருடைய பாரம்பரிய தொகுதியாக இருந்தது. 2014 தேர்தலிலும் இங்கு அவர் வெற்றி பெற்று எம்பி.யானார். அத்வானிக்கு கவுரவம் அளிக்கும் வகையில், இந்த தொகுதியில் இதுவரை வேறொருவரை பாஜ தனது வேட்பாளராக நிறுத்தியது கிடையாது. இந்த தேர்தலில் அதையும் மோடி செய்து விட்டார். காந்தி நகர் தொகுதி மட்டுமின்றி, நாட்டின் வேறு எந்த தொகுதியிலும் அத்வானி போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.

கட்சியில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற புதிய கொள்கையின் அடிப்படையில், ஆரம்பக்கட்ட மூத்த தலைவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. காந்தி நகர் தொகுதியில் தற்போது அமித் ஷா நிறுத்தப்பட்டு இருக்கிறார். கட்சியிலும், ஆட்சியிலும், நாடாளுமன்றத்திலும் எல்லா வகையிலும் மோடியால் அவமதிக்கப்பட்ட போதிலும், அத்வானி ஆழ்ந்த மவுனத்தை சாதித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக காத்து வந்த மவுனத்தை நேற்று அவர் கலைத்தார். கட்சி தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தனது கருத்துகளை தனது சமூகவலை ‘பிளாக்’கில் அத்வானி எழுதி வந்தார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ‘பிளாக்’கில் எழுதுவதை அவர் நிறுத்திக் கொண்டார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, நேற்று அவர் தனது பிளாக்கில், ‘முதலில் நாடு; அடுத்து கட்சி; அதன் பிறகே சுயநலம்’ என்ற பெயரில் அதிரடி கருத்துகளை எழுதியுள்ளார்.

1984ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி வாஜ்பாயுடன் இணைந்து பாஜ.வை அத்வானி நிறுவினார். அதன் நிறுவன தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இதை அவர் எழுதி இருக்கிறார்.  தன்னை எதிர்க்கும் கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர்களும் ‘தேச விரோதிகள்’, ‘எதிரிகள்’ என மோடியால் அழைக்கப்படுகின்றனர். இதை தனது பிளாக்கில் மறைமுகமாக சுட்டிக்காட்டி, அத்வானி கடுமையான விமர்சித்துள்ளார். மேலும், தனது செய்தியில் மோடி, அமித் ஷா உட்பட யாருடைய பெயர்களையும் அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.  அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ள விவரம் இதோ:ஜனநாயகத்தை பாதுகாப்பதும், ஜனநாயக பாரம்பரியத்தை பேணுவதும் நமது கட்சியில் இருந்து வருகிறது. மேலும், பெரும் தேசிய கட்டமைப்பில் பாஜ.வின் பெருமைக்குரிய அடையாளமாகவும் இவை இருந்து வருகின்றன. இந்திய ஜனநாயகத்தின் சாரம்சமே, கருத்துரிமையையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் மதிப்பதுதான்.

அரசியல் ரீதியாக தன்னுடன் ஒத்து போகாமல் முரண்படுபவர்களை பாஜ ஒருபோதும் தனது எதிரிகளாக கருதியது கிடையாது. அவர்களின் எதிர்ப்பாளர்களாக மட்டுமே கருதியது. மேலும், நமது இந்திய தேசியவாத கருத்தின்படி, இப்படிப்பட்டவர்களை நாம் ‘தேச விரோதி’களாகவும் கருதியது கிடையாது.   தனிப்பட்ட  முறையிலும், அரசியல் அளவிலும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் தான் விரும்புவதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிப்பதில் நமது கட்சி உறுதியாக இருந்து வருகிறது. சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாதுகாப்பதில் பாஜ எப்போதும் முன்னோடியாக இருந்து வந்துள்ளது. எனவே, தனது கடந்த காலத்தை மறுந்து விடக்கூடாது. எதிர்காலத்தையும் கட்சி கூர்ந்து பார்க்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைத்து விடக் கூடாது.
இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

 மக்களவை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில்,  பாஜ.வின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும் நெருக்கடியான நிலையில்,  அத்வானியிடம் இருந்து இந்த கருத்துகள் வெளிப்பட்டு இருப்பது தேசிய  அரசியலில் பெரும் பரபரப்பையும். பாஜ.வில் பெரிய  கலக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது. இது, அத்வானியின் தனிப்பட்ட கருத்தாக மட்டும்  பார்க்கப்படவில்லை. கட்சியில் இருந்து மோடி, அமித் ஷாவால் ஓரம்  கட்டப்பட்டுள்ள அனைத்து மூத்த தலைவர்களின் கருத்தாக பார்க்கப்படுகிறது.  இது, பாஜ.வின் தேர்தல் வெற்றியை ஆட்டிப் பார்க்கும் ஆயுதமாக  எதிர்க்கட்சிகளால் கருதப்படுகிறது. அதேநேரம், மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மோடி கப்சிப்
அத்வானி தெரிவித்த  கருத்துகள் குறித்து பிரதமர் மோடி டிவிட்டர் வெளியிட்டுள்ளார். ‘‘பா.ஜவின்  உண்மையான சாரம்சத்தை அத்வானி துல்லியமாக சொல்லியிருக்கிறார். ‘‘முதலில்  நாடு, அடுத்து கட்சி, தனது நலன் கடைசியே’’ என்பதுதான் வழிகாட்டும்  மந்திரம். அத்வானியை போன்ற உயர்ந்தவர்கள் கட்சியை வலுப்படுத்தியது  பெருமையாக உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். ஆனால், அத்வானி சூடாக சொன்ன  கருத்துகள் பற்றி மோடி வாயை திறக்கவே இல்லை.

அமித்ஷா பயணம் ரத்து
தெலங்கானாவில் 11ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இம்மாநிலத்தில் உள்ள கரீம் நகர், வாராங்கல்லில் நேற்று அமித்ஷா பிரசாரம் செய்ய இருந்தார். இந்நிலையில், திடீரென தனது பயணத்தை அவர் ரத்து செய்தார். தன்னையும், மோடியையும் அத்வானி விமர்சித்ததால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாகவே, அவர் தனது பயணத்தை ரத்து செய்ததாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. பாஜ பொதுச் செயலாளர் முரளீதர் ராவ் கூறுகையில், “பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் கட்சியின் தலைவர்கள் காலை அவசர கூட்டத்தை நடத்தினார்கள். இதில் தேர்தல் அறிக்கை, தேர்தல் தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிவதற்கு தாமதம் ஆனதால்தான் தெலங்கானாவுக்கு அமித்ஷா  வரவில்லை” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Advocate ,Advani , Modi, Advani, democracy
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய...