×

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது : மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905ம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் பரிசோதனையில் கி.மு.791 கால் பொருட்களும் கிடைத்துள்ளதாக மத்திய அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து ஆதிச்சநல்லூர் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசுக்கு அனுமதி தருமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த கோரி மனு

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், தூத்துக்குடி, சிவகளைபரம்பு பகுதியில் அகழாய்வு நடத்தக்கோரியும் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன்,   சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது.

முந்தைய விசாரணையில் நடைபெற்றது என்ன ?

இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது,  ‘‘ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி உள்ளது.  மத்திய தொல்லியல்துறையின் நடவடிக்கையை பார்க்கும்போது தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை கால வயதை அறியும் கார்பன் பரிசோதனைக்கு புளோரிடா, டெல்லிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 2005-ல் முடிக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அறிக்கையை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய அதிகாரிகள் பிப்ரவரி 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அடுத்தக்கட்ட விசாரணையில் தொல்லியல் துறை அதிகாரிகள் சத்தியபாமா, சத்தியமூர்த்தி ஆகியோர் ஆஜராகி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்கள் பரிசோதனைக்காக டெல்லி மற்றும் புளோரிடாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மத்திய அரசு தகவல்

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரி பொருட்களின் கார்பன் பரிசோதனையில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரியவந்துள்ளது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் அளித்தது.

தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா?   என்று மத்திய தொல்லியல்துறை ஏப்ரல் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : birth ,Christ ,Adichanallur ,court ,Central Government , Adichanallur, Central Government, Carbon Testing, Madurai Branch, Archeology Department
× RELATED திண்டுக்கல்லில் சிலுவை பாதை ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு