×

மஞ்சூர் அருகே கோயில் கேட்டை உடைத்து சேதப்படுத்திய யானை

மஞ்சூர்:  நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த கரியமலை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கோயில் கேட்டை உடைத்து சேதப்படுத்தின. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. செடி, கொடிகள் காய்ந்து கருகியுள்ளதுடன், நீர் நிலைகள் வறண்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவு தேடி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. இந்நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை மஞ்சூர் அடுத்துள்ள கரியமலை கிராமத்திற்குள் புகுந்தது. யானையை கண்டு அச்சமடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓடினர். இதை தொடர்ந்து அந்த யானை தோட்டத்து வேலிகளை உடைத்து உள்ளே புகுந்து செடி, கொடிகளை நாசப்படுத்தியது.

தகவலறிந்த குந்தா வனத்துறை ரேஞ்சர் சரவணன் உத்தரவின் பேரில், வனவர் ரவி உள்பட வனத்துறையினர் கரியமலை கிராமத்திற்கு சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், சத்தம் போட்டு காட்டு யானையை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர். இதனை தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து வெளியேறி காளியம்மன் கோயில் வளாகத்திற்குள் புகுந்தது. கோயில் வளாகத்தில் உலா வந்த யானை அங்கிருந்த நுழைவு வாயில் கேட்டை உடைத்து தள்ளியது. பின்னர் கோயிலில் இருந்து வெளியேறிய யானை தேயிலை தோட்டம் வழியாக கீழ்குந்தா பகுதியை நோக்கி சென்றது. அப்போது தேயிலை தோட்டத்தில் பசுந்தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டு யானை வருவதை கண்டு ஓடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கரியமலை கிராமத்தில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மீண்டும் யானை கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant ,temple ,Manjur , Mancur, Temple, Elephant
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...