×

தொடர்ச்சியாக 4வது தோல்வி! காம்பினேஷனே புடிபட மாட்டேங்குது..... விராத் கோஹ்லி விரக்தி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிரடி வீரர்கள் அதிகம் இருந்தாலும், நடப்பு சீசனில் வெற்றி தேவதையின் கடைக்கண் பார்வை அந்த அணி மீது இதுவரை படவேயில்லை. ஹாட்ரிக் தோல்வியுடன் துவண்டு போயிருந்த ஆர்சிபி அணி, தனது 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் மண்ணைக் கவ்வியது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜெய்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச, ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. தொடக்கத்திலேயே கோஹ்லி 23, டி வில்லியர்ஸ் 13, ஹெட்மயர் 1 ரன் எடுத்து ஷ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவை கொடுத்தது. உறுதியுடன் போராடிய பார்திவ் 67, ஸ்டாய்னிஸ் 31, மொயீன் அலி 18 ரன் எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து வென்றது. கேப்டன் ரகானே 22, பட்லர் 59, ஸ்மித் 38, திரிபாதி 34* ரன் விளாசினர். ராஜஸ்தான் அணியும் முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், ஆர்சிபிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியா 4வது தோல்வி கண்டது குறித்து பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லி கூறியதாவது: இது மிக நீண்ட தொடர் கிடையாது. ஒன்றரை மாதம் அல்லது அதிகபட்சமாக இரண்டு மாதத்துக்கு நடக்கும்.

இதில் உடனடியாக சுதாரித்துக் கொள்வது மிக மிக அவசியம். இப்படி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தால் மீண்டு வருவது மிகக் கடினம். இதை அனைவரும் உணர்ந்துள்ளோம்.  நான்கில் இரண்டு போட்டிகளில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனாலும், வாய்ப்புகளை வீணடித்துவிட்டோம். அனைத்து வகையிலும் சம பலம் வாய்ந்த அணியை தேர்வு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறோம். சரியான காம்பினேஷன் அமைந்துவிட்டால் வெற்றி நிச்சயம். இது குறித்து தீவிரமாக ஆலோசித்து தக்க முடிவு எடுப்போம். இது வரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களைக் களமிறக்கி முயற்சி செய்யவும் தயங்க மாட்டோம். வீரர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ச்சியான தோல்விகளால் வீரர்கள் மனதளவிலும் உடல் ரீதியாகவும் சோர்வடைவது இயல்புதான். இன்னும் 10 லீக் ஆட்டங்கள் உள்ளன. தன்னம்பிக்கையுடன் விளையாடினால் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார். ஆர்சிபி அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. உள்ளூரில் நடக்கும் இப்போட்டி ஆர்சிபி அணிக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : defeat ,Companions ,Virat Kohli , Virat Kohli, rcb,
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...