×

‘டோட்’ நடத்துவதில் புது குழப்பம் பொறியியல் கவுன்சலிங் சிக்கல் நீடிப்பு : மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சலிங்கை தொழில்நுடப் கல்வி இயக்ககம் ‘டோட்’ இனி நடத்தும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அதே  நேரத்தில் கவுன்சலிங் நடத்துவதற்கான மென்பொருள் அண்ணா பல்கலைக்கழகம் வசம் இருப்பதால் சிக்கல் தொடர்கிறது. கடந்த 2017ம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான அரசாணையை திரும்ப பெற்று, உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் இன்ஜினியரிங் கவுன்சலிங்  கமிட்டி செயல்படும் என்று புதிய அரசாணையை உயர் கல்வித்துறை வெளியிட்டதால், இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்தும் பொறுப்பு தேவையில்லை என்று அண்ணா  பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதுதொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன், இனிமேல் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்துவதில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடாது. அதே நேரத்தில் அரசாணை  எண். 69ஐ திரும்ப  பெறும்பட்சத்தில், அண்ணா பல்கலைக்கழக தரப்பில் இன்ஜினியரிங் கலந்தாய்வை  நடத்த தயாராக உள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் அல்லது  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் என யாரேனும் ஒருவர் தான் கவுன்சலிங்கை நடத்த வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை செயலாளருக்கு அண்ணா பல்கலைக்கழக  துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதினார்.  

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பணிகளை தொடங்க வேண்டிய நிலையில், இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தப்போவது யார்  என்ற கேள்வி தொடர்ந்தது. இந்நிலையில் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்கமே இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தும் என்று  நேற்று கூறினார். இந்நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்கமே இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்தப்போவதுஉறுதியாகியுள்ள நிலையில், இன்ஜினியரிங் கவுன்சலிங்கை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என்பதில் சிக்கல் தொடர்கிறது. 2017ம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ கவுன்சலிங்குக்கு முன், இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்கியது. எம்பிபிஎஸ் கவுன்சலிங்,  இன்ஜினியரிங் கவுன்சலிங் என இரண்டுக்கும் விண்ணப்பித்த மாணவர்களில், அண்ணா பல்கலைக்கழகம், அரசு இன்ஜினியரிங் கல்லூரி சீட் தேர்வு செய்த ஆயிரத்துக்கும்  அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்று விட்டனர். அந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சலிங் ஒரே கட்டமாக நடத்தப்பட்டதால், காலியான இடங்களில் மாணவர்  சேர்க்கை நடத்த முடியாமல் போனது.  அதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு முதல் இன்ஜினியரிங் கவுன்சலிங் இணையதளம் மூலம் நடத்தப்படும் என்று அண்ணா  பல்கலைக்கழகம் அறிவித்தது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் ராமானுஜம் கம்ப்யூட்டிங் சென்டரை சேர்ந்த ஆசிரியர்கள் இன்ஜினியரிங் கவுன்சலிங் மென்பொருளை வடிவமைத்தனர். இதற்கு 6  மாதகாலம் ஆனதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் மே  3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடந்தது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் கலந்தாய்வை இணையதளம் மூலமே அதிகாரிகள் நடத்தி முடித்தனர்.இந்நிலையில் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. மென்பொருளுக்காக தொழில்நுட்ப  கல்வி இயக்ககம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை கேட்குமா அல்லது பழைய முறைப்படி மாணவர்களை அழைத்து கவுன்சலிங் நடத்துமா என்று தெரியவில்லை.  

அதே நேரத்தில் முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான டான்கா நுழைவுத்தேர்வு வினாத்தாளை இதுவரை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்  வடிவமைத்து வந்தனர். இந்நிலையில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின்கீழ் உள்ள 10 அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், அதுதொடர்பான  போதிய அனுபவமும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்களை எவ்வாறு தயாரிப்பார்கள் என்று தெரியவில்லை. தொழில்நுட்ப கல்வி  இயக்கக அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் உதவியை கேட்பார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில், இதுவரை தொழில்நுடப்கல்வி இயக்ககம்  தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
* மென்பொருளுக்காக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை கேட்குமா அல்லது பழைய முறைப்படி மாணவர்களை அழைத்து  கவுன்சலிங்  நடத்துமா என்று தெரியவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New confusion, 'Todd', Engineering Counseling, Problem Extension
× RELATED புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது