×

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதார் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில்  தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகர்கோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் அன்னாள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு ஆதார் எண் இணைந்த  பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் வெளியிட்டது.ஆதார் அடையாளம் என்பது அரசின் மானியம், உதவி போன்ற திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆதார் சட்டம் பிரிவு 7ல் தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், இதற்கு மாறாக தமிழக அரசு பள்ளிகளில் வருகைப் பதிவிற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

இது எங்களின் அடிப்படை உரிமையைப்பாதிக்கும்.எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின்  வருகைப் பதிவிற்கான பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழக அரசின்  உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசுக்கு  உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,arrival ,schools ,government , Government , Government help, Aadyar , schools attached,biometric
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...