×

பொய்யான அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தேர்வாணைய ஆலோசகர் கைது

* போலீஸ் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு
* 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு

சென்னை: சீருடைப் பணியாளர் பணிக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொய் அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய ஆலோசகர் ஜி.வி.குமாரை மத்திய  குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் உயர் போலீசார் சிலர் சிக்கியுள்ளதால் 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018ம் ஆண்டு கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான  விடை எழுதிய தனக்கு மதிப்பெண் வழங்கவில்லை எனக்கூறி, இரண்டாம் நிலை காவலர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை ஐஐடி பேராசிரியர் மூர்த்தி அளித்த பரிந்துரைப்படி மனுதாரர் எழுதிய விடை தவறு எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது.ஆனால், அருணாச்சலம் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் சென்னை ஐஐடியில் மூர்த்தி என்ற பெயரில் எவரும் வேலை செய்ய வில்லை. எனவே, நிபுணர் தாக்கல் செய்த  அறிக்கை போலியானது என்று என்றும் முறையிட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி மற்றும்  உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டார்.பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐஜி செந்தாமரைக் கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின்  ஆலோசகராக ஜி.வி.குமார்(51) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் தான் மூர்த்தியை ஐஐடி பேராசிரியர் என்று அறிமுகம் செய்துவைத்தார். கேள்விக்கான பதில்  தொடர்பான அறிக்கையும் வாங்கி தந்தார். ஜி.வி.குமாரும், மூர்த்தியும் தேர்வாணையத்தை ஏமாற்றியுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் மூர்த்தி(62) மற்றும் தேர்வாணைய ஆலோசகர் ஜி.வி.குமார் மீது ஐபிசி 420,465,468,471, 491, 120 (பி)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அண்ணாநகரை சேர்ந்த ஜி.வி.குமாரை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் ஜி.வி.குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை துறைமுறை பொறுப்பு கழகத்தில் உளவியலாளராக பணியாற்றி உள்ளார். பிறகு சில தனியார்  நிறுவனங்களுக்கு ஆலோசகராக தற்போது பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர், ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கணித ஆசிரியராக  பணியாற்றி 2013ல் ஓய்வுபெற்ற மூர்த்தியை, ஜி.வி.குமார் தொடர்பு கொண்டு ஒரு கேள்விக்கு விடை கேட்டுள்ளார். அதற்கு மூர்த்தி வாட்ஸ் அப் மூலம் பதில்  அளித்துள்ளார். அதன் பிறகு கணித ஆசிரியர் மூர்த்தியை ஒரு ஐஐடி பேராசிரியர் என பொய்யான ஒரு தகவலை தேர்வாணையத்திற்கு தெரிவித்து, இந்த வழக்கில்  ஜி.வி.குமார் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த மோசடிக்கு உயர் காவல் துறை அதிகாரிகள் பலர் உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஜி.வி.குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு ெசய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர். அந்த வழக்கில் தலைமறைவாக  உள்ள ஐஐடி பேராசிரியர் என கையெழுத்து போட்ட ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arbitration consultant ,High Court , False statement, Arbitration consultant, High Court
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...