×

திருச்சூரில் பாஜ வீசிய அஸ்திரம் அமோக ஆதரவுடன் நிச்சயம் வெல்வேன்

திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை. இவர்களில் சிலருக்கு வேட்பாளர்களாக களமிறங்கும் வாய்ப்பும் கிடைக்கும். நடப்பு மக்களவை தேர்தல் திருவிழாவில் இப்படி வாய்ப்பு கிடைத்துள்ளவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நட்சத்திரங்கள் அரசியல் வானில் ஜொலிக்குமா அல்லது திருவிழா கூட்டத்தில் தொலைந்து போகுமா என்பது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரிந்துவிடும். மக்களின் ஆதரவை வேண்டி வாக்கு வேட்டை நடத்த இருக்கும் நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களை ‘ஸ்டார் வார்ஸ்’ பகுதி உங்களுக்காக தொகுத்தளிக்கிறது.

முதலில் வருபவர்... மலையாள நடிகர் சுரேஷ் கோபி (58). தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். 1997ல் களியாட்டம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வாங்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் ஆன்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் நடித்து வருகிறார். மனைவி ராதிகா நாயர், ஐந்து குழந்தைகள். கல்லூரி மாணவராக இருந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவில் முக்கிய பங்காற்றியவர், பின்னர் காங்கிரசுக்கு ஆதரவாக 2006 கேரள சட்டமன்ற தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். 2016ல் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

2019 மக்களவை தேர்தலில் இவரை திரிசூர் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாஜ. இங்கு போட்டியிடுவதாக இருந்த துஷார் வெல்லபள்ளி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து நிற்பதால், சுரேஷ் கோபிக்கு திரிசூரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கேரளாவில் பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், திரிசூரில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நினைக்கும் பாஜ, வலுவான வேட்பாளரைக் களமிறக்கி சொல்லி அடிக்கும் முனைப்புடன் தான் நடிகர் சுரேஷ் கோபியை தேர்வு செய்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் சார்பில் பாஜக தேசிய செயலர் என்னை தொடர்பு கொண்டு திரிசூரில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். மக்களின் அமோக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்றார். முன்னதாக திருவனந்தபுரம் அல்லது கொல்லம் தொகுதியில் தான் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ராஜ்யசபா எம்.பி.யாக 74 சதவீதம் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கும் இவர் 4 கேள்விகளை மட்டுமே கேட்டிருக்கிறார். மசோதா எதையும் தாக்கல் செய்யவில்லை. நடிகராக ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட்... என்று கலந்துகட்டி அடித்தவர், வாக்கு வேட்டையில் எந்த அளவுக்கு மக்களைக் கவர்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thrissur ,Bhajans , Thrissur, Bhaj, Astrology, support, win
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!