×

டிக்-டாக் செயலிக்கு தடை கோரிய வழக்கு : மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை : டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் டிக்டாக் செயலி இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பலர் அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுபோன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, டிக்-டாக் செயலியை தடைவிதிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் டிக்-டாக் செயலியை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்ற செயலிகளை மத்திய அரசே முன்னின்று தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிக்-டாக் செயலிக்கு தடைவிதிப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்., 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிராங்க் ஷோ வீடியோக்கள் மூலம் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இதில் ஒரு சிலர் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதுபோன்று சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு பட வீடியோக்களை எடுக்கவும், வெளியிடவும் தடை விதித்துள்ளனர். மேலும் தொலைக்காட்சிகளிலும் பிராங்க் ஷோ வீடியோக்களை ஒளிபரப்பு செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government , Tik-tok processor, federal government, information technology department, prank show
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...