×

மதுரை மற்றும் சென்னையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15.75 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை, 80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 132 கோடி மதிப்புள்ள 468 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை அண்ணா சாலை ஆயிரம்விளக்கு பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்துகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாகனத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் தனியார் நகைக் கடை ஊழியர்கள் என்றும், அவர்கள் உரிய ஆவணங்களின்றி நகையை எடுத்து வந்ததும்  தெரியவந்தது.

பின்னர், போலீசார் பறிமுதல் செய்த நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து நகைகளை திரும்பப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல, இன்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகளும், நகைகளும் இருந்தன. அவற்றின் எடை சுமார் 47 கிலோ இருக்கும் எனவும், அதன் மதிப்பு ரூ.15 கோடி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் 47 கிலோ தங்க நகைகளையும், நகைகளை ஏற்றி வந்த வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Investigations ,Madurai ,Chennai , Madurai, Chennai, election flying force, checking, smuggling, seizure
× RELATED 8 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை...