×

பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: மேட்டுப்பாளையம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

கோவை: நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு திரண்டுள்ள மக்களை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என தோன்றுகிறது. இதை பார்க்கும்போது இத்தேர்தலில், தமிழகம்-புதுவையில் 40க்கு 40 வெற்றியை பெறப்போகிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க, இங்கு திரண்டுள்ளீர்கள்.  இது, தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா? அல்லது மாநில மாநாடா? என சந்தேகம் எழும் அளவுக்கு இங்கு குவிந்துள்ளீர்கள். இது, வெற்றிவிழா மாநாடு என கருதும் அளவுக்கு கூட்டம் குவிந்துள்ளது. ‘நம் கையில் மாநில ஆட்சி, நம் கை காட்டுவதே மத்திய ஆட்சி’’ என்ற முழக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்கிறோம். அந்த முழக்கம் உங்கள் முகத்திலும் தெளிவாக தெரிகிறது. மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் எடுபிடி ஆட்சி நடக்கிறது. மோடி, ஒரு சர்வாதிகாரி. எடப்பாடி ஒரு உதவாக்கரை. ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி. மோடிக்கேற்ற எடப்பாடி. எடப்பாடிக்கு ஏற்ற மோடி. இதுதான் இன்றை நாட்டின் நிலைைம. இந்த பாசிச, அக்கிரம ஆட்சிக்கு முடிவுகட்ட இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றாக வேண்டும். உங்கள் ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒரு ஓட்டு என்பது இந்தியாவின் தலையெழுத்தை, தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கிற ஓட்டு. உங்களது வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் ஓட்டு. மறந்துவிடாதீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு காரணமாக, மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரப்பதவியில் தவறான மனிதர்கள் அமர்ந்துவிட்டார்கள். ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் போய் சேர்ந்துவிட்டது.

ஆ.ராசா மீது மிகப்பெரிய வீண் பழியை போட்டார்கள். சதி செய்து, வழக்கில் சிக்கவைத்தார்கள். எந்த குற்றமும் இல்லை என நிரூபித்து, குற்றமற்றவராக வெளியே வந்தார். அவரை மீண்டும் உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். நான், கடந்த பத்து நாளும் நீலகிரி பற்றித்தான் தேர்தல் பிரசாரத்தில் பேசினேன். ஒவ்வொரு கூட்டத்திலும் கொடநாடு பற்றி பேசியுள்ளேன். குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் போடும்வரை கொடநாடு பற்றி தொடர்ந்து பேசுவேன். ஒரு நாட்டின் முதல்வர் மீது அரசியல் ரீதியாக விமர்சனம் வரலாம். செயல்பாட்டில் தவறு இருக்கிறது என்றால் விமர்சனம் வரலாம். அவர் சொன்ன கருத்தின் மீது விமர்சனம் வரலாம். ஆனால், ஒரு கொலை குற்றச்சாட்டு வரலாமா? அடியாட்களை அனுப்பி, கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டு வரலாமா? அப்படிப்பட்ட குற்றச்சாட்டை சந்தித்து வருபவர்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என கோர்ட்டில் தடை உத்தரவு கோருகிறார்கள். ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்படிப்பட்ட ஒரு அக்கிரமத்தை நடத்திமுடித்துவிட்டு, அதுபற்றி பேசக்கூடாது என்கிறார்கள். நான், இன்னும் பேசுவேன். இதற்கு மேலும் பேசுவேன். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை பேசுவேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். நான், விடவே மாட்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்து தண்டிப்பதற்கு முன்பு, நீங்கள் தண்டிக்க வேண்டும்.

இதற்கு அடுத்து, இன்னொரு அக்கிரமம். இக்கூட்டத்தில் பங்கேற்க, நான் எனது ஓட்டலில் இருந்து வெளிேய வந்தேன். அங்கு, 2 பெண் காவலர்கள் இருந்தனர். ஒரு செல்பி எடுக்க வேண்டும் என ேகட்டனர். நான், அவர்களிடம், உங்களுக்கு எந்த ஊர்? என  கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல், ரொம்ப வெட்கப்பட்டனர். ஏன் என திருப்பி கேட்டேன். உடனே, பொள்ளாச்சி... என்றனர். பொள்ளாச்சி என பெயர் சொல்வதற்கே வெட்கமாக உள்ளது என்பதை வெளிக்காட்டினார்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சி பொல்லாத ஆட்சியாக உள்ளது. கடந்த 7 ஆண்டாக, 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களை கடத்தி, கட்டாயப்படுத்தி, சில தோட்டம், வீடுகளில் அடைத்து வைத்து, பாலியல் தொல்லை கொடுத்து, போட்டோ, வீடியோ எடுத்து, மிரட்டி, அச்சுறுத்தி, பணம் பறித்து, கோடி கோடியாக கொள்ளையடித்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சி எப்போது வந்ததோ, அப்போதில் இருந்தே இந்த கொடிய குற்றச்செயலை செய்துள்ளனர். இதற்கு யார் பின்னணி? இப்படிப்பட்ட ஒரு நிலையில், தமிழகத்தில் அக்கிரம ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நமக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் ஒன்றும் இல்லை. வெறும் 1.1 சதவீதம் மட்டும்தான். ஜெயலலிதா முதல்வராக அமர்ந்தார். அவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியில் இன்று கொலையாளிகள் அமர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் ஐந்துமுறை திமுக ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். மக்களுக்கு தேவையான திட்டங்கள் எல்லாம் தொடரும். எனவே, இந்த தேர்தலை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறவர்களுக்கு உவித்தொகை வழங்குவோம் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இதற்காக, அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மர்மமான பின்னணியில் இருந்து குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தேர்தல் முடிந்தபிறகுதான் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு வருமா, வராதா என தெரியாது. மாபெரும் வெற்றியை தேடித்தாருங்கள். தலைவர் கலைஞர் நினைவிடத்தில் வெற்றிமாலையை சமர்ப்பிப்போம். இதற்கு, உறுதிஎடுப்போம். சபதம் ஏற்போம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Pollachi ,meeting ,Mettupalayam ,MK Stalin , Pollachi sexual abuse, MK Stalin, Mettupalayam meeting
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!