×

நெல்லை அதிமுகவுக்கு தொல்லை? கடும் சவால் ெகாடுக்கும் அமமுக n கெத்து காட்டும் திமுக

நெல்லை: தென் மாவட்டங்களின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக நெல்லை ெதாகுதி உள்ளது. இத்தொகுதியில் ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, பாளையங்கோட்டை, நெல்லை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 3 லட்சத்து 98 ஆயிரத்து 139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 40 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட சிவனனைந்த பெருமாள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 370 ஓட்டுகளும், தனித்துப் போட்டியிட்ட காங்கிரசின் ராமசுப்பு 62 ஆயிரத்து 863 வாக்குகள் பெற்று 4ம் இடமும் பிடித்தார். இந்த மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது கூடுதல் பலமாகும்.


அதிமுக எம்.பி. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. எம்.பி. நிதியில் கட்டப்படும் பள்ளி கட்டிடங்கள், பஸ் நிறுத்தங்கள், குடிநீர் தொட்டிகள், நூலகங்கள் ஆகியவையே எம்.பி.யின் சாதனையாக பார்க்கப்படுகின்றன. நெல்லை தொகுதிக்கு தேவையான திட்டங்களில் ஒன்றான தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக கிடப்பில் போடப்பட்டது. இதனால் திசையன்விளை, சாத்தான்குளம் சுற்றுவட்டார விவசாயிகள் இன்னமும் விவசாயத்திற்கு பருவமழையை நம்பியுள்ளனர். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரிகளும், விவசாயிகளும் காத்திருந்தனர். அதுவும் கிடைக்கவில்லை. இதனால் ரூ.369 கோடியில் தீட்டப்பட்ட  திட்டத்தின் மதிப்பீடு தற்போது ரூ.852 கோடியாக உயர்ந்துள்ளது. திட்டத்தை  தாமதப்படுத்தியதால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக மக்கள் வரிப்பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 3ம் கட்டப்  பணிகள் தொடங்கியுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி பாதிப்பு தங்கள் தொழிலையே பாதித்துவிட்டதாக பீடித் தொழிலாளர்கள் புலம்பி வருகின்றனர். ரயில்வே வளர்ச்சியும் கடந்த 5 ஆண்டுகளில் பெயரளவுக்கே உள்ளது. நெல்லை ஸ்மார்ட் சிட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் அடிப்படை வசதிகளுக்கு அவை செலவிடப்பட்ட மாதிரி தெரியவில்ைல. நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கை கொண்டான் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை செயல்படுத்தப்படாததால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. படித்த இளைஞர்கள் சென்னைக்கும், பெங்களூருக்கும் வேலை தேடி செல்வது தொடர்கிறது. மொத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளில் உருப்படியான திட்டங்கள் எதையும் எம்பியாக இருந்த பிரபாகரன் கொண்டு வரவில்லை.

யாருக்கு வெற்றி?

நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ, எம்.பி பதவிகளோடு, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகன் என்ற பெரிய பேனரோடு போட்டியிடுகிறார். நெல்லையின் ராஜ்யசபா எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என ஒரு பெரிய பட்டாளமே அவருக்கு ஓட்டு கேட்டு செல்கிறது. நெல்லை தொகுதியை கேட்டு விண்ணப்பித்திருந்த சில விஐபிக்கள், வேட்பாளராக மனோஜ் பாண்டியனை அறிவித்ததுமே, நமக்கேன் வம்பு என நினைத்து சைலன்டாகிவிட்டனர். தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தொழிலதிபர் என்ற அந்தஸ்தோடும், கிழக்கு மாவட்டத்தில் நல்ல பரிட்சயமானவர் என்கிற முத்திரையோடும் வாக்குகளை கேட்டு உலா வருகிறார். மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிரான அலை தொகுதியில் அவர் செல்கிற இடங்களில் நல்ல வரவேற்பை தருகிறது. நெல்லை தொகுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். கணிசமாக முஸ்லிம்களும் உள்ளனர். இந்த இரு மதத்தினரும் மொத்தமாக அதிமுக-பாஜ கூட்டணியை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளனர். இது அதிமுகவுக்கு பெருத்த பின்னடைவையும், திமுகவுக்கு டானிக்காகவும் அமைந்துள்ளது.

 நெல்லையில் காங்கிரசுக்கு தனி வாக்கு வங்கி உள்ளதால் அவர்களும் தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு உழைத்து வருகின்றனர்.
வேட்பாளர் மாற்றம், எந்த சின்னம் என பலவித குளறுபடிகளால் தவித்த அமமுகவும் தற்போது நிம்மதியை எட்டியுள்ளது. அமமுக வேட்பாளராக போட்டியிடும் மைக்கேல் ராயப்பன் புதிதாக கிடைத்த பரிசு பெட்டி சின்னத்தோடு தொகுதியில் ஓட்டு கேட்டு வருகிறார். ஏற்கனவே மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அவர் ஒரு லட்சம் வரை வாக்குகளை பெற்றவர் என்பதால் சின்னத்தை மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீவிரத்தோடு பணியாற்றி வருகிறார்.  இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக களத்தில் புதிதாக குதித்துள்ள சாப்ட்வேர் கம்பெனி அதிபர் வென்னிமலை மாற்றத்தை நோக்கி என்ற கோஷத்துடன் வலம் வருகிறார். நெல்லையில் தேர்தல் வெற்றியை சமீபகாலமாக கொள்கை, கோட்பாடுகள், தலைவர்கள் பிரசாரம், பொதுமக்கள் பிரச்னை என எதுவுமே தீர்மானிப்பதில்லை. பணமே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது. 4 கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தன் பலத்தை நிரூபிக்க களத்தில் குதித்துள்ள அமமுக அதிமுகவிற்கு கடும் சவாலாக உள்ளது. திமுக தற்போதைய நிலையில் முன்னணியில் இருந்தாலும், இதில் கரை சேரப் போவது யார் என்பது மே 23ம் தேதி தெரிந்து விடும்.

2009க்கு முன்பு இருந்த நெல்லை தொகுதியில் நெல்லை, பாளை, தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இருந்தன. 2009ல் தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு நெல்லை தொகுதியில் ஏற்கெனவே இருந்த நெல்லை, பாளை., சட்டசபை தொகுதிகளுடன் நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதிகள் இணைக்கப்பட்டன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nelli AIADMK ,DMK , Nellai, AIADMK, troublesome, challenging, ammute, DMK showing kettu...
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி