×

ஹர்திக் படேலின் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனுவை, அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு குஜராத்தின் விஸ்நகரில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடந்தது. படிதார் அனாமத் அன்டோலன் சமீதி இயக்க தலைவர் ஹர்திக் பட்டேல் தலைமையில் நடந்த இந்த  போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இது தொடர்பான வழக்கில் ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் மேல்முறையீடு செய்தார். இதில், கீழ் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை கடந்தாண்டு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஹர்திக் படேல் காங்கிரசில் இணைந்தார். இந்த மக்களவை தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடவும் அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால்  தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தனது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் தாக்கல் செய்த மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, “குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இதனை இப்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க முடியாது” என்று கூறி தள்ளுபடி செய்தது. ஜாம்நகர் மக்களவை தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்கும் ஹர்திக் படேலின் மனு விசாரிக்கப்படாததால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு  சாத்தியமில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hardy Patel ,Supreme Court of India , Harikhi Patel's ,inquire urgently, Supreme Court
× RELATED தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற...