×

30 ஆண்டுகளில் முதல்முறை கூர்காலாந்து கோரிக்கை இத்தேர்தலில் கிடையாது: டார்ஜிலிங்கில் கூட்டாக அறிவிப்பு

டார்ஜிலிங்: கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக வரும் மக்களவை தேர்தலில் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தும் முடிவை இப்பகுதியை சேர்ந்த மூன்று முக்கிய கட்சிகள் கைவிட்டுள்ளன.மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து  கூர்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்முறையாக கடந்த 1980ம் ஆண்டு சுபாஷ் கிசிங்  தலைமையில் அமைக்கப்பட்ட கூர்கா தேசிய விடுதலை முன்னணி (ஜிஎன்எல்எப்) மூலம் எழுப்பப்பட்டது. பின்னர், அதில் இருந்து பிரிந்த பிமல் குருங் தலைமையில் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் (ஜிஜேஎம்), அவரிடமிருந்து  பிரிந்த பினய் தமாங் தலைமையிலான கூர்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளாக கூர்காலாந்து கோரிக்கையை மட்டுமே முன்வைத்து போராட்டங்கள் நடத்தி  வருகின்றன. இதற்கு முன் நடந்த அனைத்து மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களின் போது தனி மாநில கோரிக்கையை இக்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த மக்களவை தேர்தலில் முதல்முறையாக இந்த கோரிக்கையை  வலியுறுத்துவது இல்லை என்று இவை  கூட்டாக முடிவு செய்துள்ளன. அதற்கு மாறாக, டார்ஜிலிங் மலைப்பகுதியின் வளர்ச்சி கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. இந்த தேர்தலில் டார்ஜிலிங் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில், பினய் தமாங் தலைமையிலான கூர்கா ஜனசக்தி மோர்ச்சா பிரிவு ஆதரவு பெற்ற திரிணாமுல் காங்கிரஸ், பிமல் குருங் தலைமையிலான கூர்கா ஜனசக்தி  மோர்ச்சா, ஜிஎன்எல்எப். ஆதரவு பெற்ற பாஜ இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.  இது குறித்து, டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் ஜிஜேஎம். எம்எல்ஏ.வுமான அமர்சிங் ராய் கூறுகையில், ``நமது இலக்கு வளர்ச்சி. கடந்த 10 ஆண்டுகளாக பாஜ எம்பி.க்கள்  மலைப்பகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’’ என்றார்.இதே கருத்தையே பினய் தமாங் தலைமையிலான ஜிஜேஎம். பிரிவு தெரிவித்துள்ளது. அதேசமயம், திரிணாமுல் மூத்த தலைவரும் அமைச்சருமான கவுதம் டெப் கூறிய போது, ``இந்நேரத்தில் கூர்காலாந்து தனி மாநில பிரச்னை  குறித்து பேசக் கூடாது. அது நமது தேர்தல் பிரச்னை அல்ல’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gorkhaland ,election ,Darjeeling , first time, Gorkhaland , election,Darjeeling
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...