×

இந்த வாட்டியாவது எங்களுக்கு போடுங்கப்பா...: ஆந்திர அரசியல்வாதிகள் கெஞ்சல்

திருமலை: தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள நோட்டாவை கண்டு ஆந்திர அரசியல் கட்சிகள் விழிபிதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணையம் உங்கள் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை பிடிக்காவிட்டால் தேர்தல் ஆணையத்தின் நோட்டா என்னும் பட்டனை அழுத்தி தங்கள் வாக்கை பதிவு செய்யலாம் என்று  தெரிவித்தது. இதன் காரணமாக 2014ம் ஆண்டு தேர்தலில் ஆந்திர அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் 12 தொகுதிகளில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டை காட்டிலும் குறைந்த அளவு வாக்கு  வித்தியாசத்திலேயே கட்சிகள் வெற்றி பெற்றது. இதனால் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக்கூடிய வாக்காக நோட்டா  மாறியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வாக்குகள் வரை நோட்டாவுக்கு வாக்காளர்கள் செலுத்தியிருந்தனர். விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதியில் 4 ஆயிரத்து 933 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்தது.

பிரகாசம் மாவட்டம், கனிகிரி தொகுதியில் 361 வாக்குகளும், குண்டூர் மாவட்டம், மங்களகிரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணா 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அங்கு  635 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்தது. இதேபோல் காகுளம் மாவட்டம், ராஜம் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கம்பாலா ஜோகுலு 512 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு நோட்டாவிற்கு  விழுந்த  வாக்கு 694.கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப்பேட்டை தொகுதியில் ஜக்கிரெட்டி 713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு நோட்டாவிற்கு விழுந்தது  615 வாக்குகள். சித்தூர் மாவட்டம், பூதலப்பட்டு தொகுதி ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனில்குமார் 902 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு நோட்டாவிற்கு 783 வாக்குகள் விழுந்தது.

அனந்தப்பூர் மாவட்டம், கதிரி தொகுதியில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாந்த் பாஷா 968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  அங்கு நோட்டாவிற்கு விழுந்த வாக்கு 733. ஆந்திராவில்  மலைவாழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய 7 தொகுதிகளில் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் அதிகம். அரக்கு தொகுதியில் 4,933, பாடேரூ தொகுதியில் 2828 குரப்பாம் தொகுதியில் 2077 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது. 2014ம் ஆண்டு தேர்தலில் 3 கோடியே 67 லட்சத்து 60 ஆயிரத்து 580 வாக்காளர்கள் இருந்த நிலையில் இரண்டு கோடியே 87 லட்சத்து 91 ஆயிரத்து 613 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதில் 1 லட்சத்து 49  ஆயிரத்து 418 வாக்குகள் நோட்டாவிற்கு செலுத்தப்பட்டிருந்தது. இதனால்  நடைபெற உள்ள பொது தேர்தலிலும் நோட்டாவிற்கு வாக்குகள் விழாத வகையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : politicians ,Andhra , throw ,wave ,Andhra politicians ,kulun
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...