×

செக் மோசடி வழக்கில் மோகன்பாபுவிற்கு ஓராண்டு சிறை: விசாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பு

திருமலை: செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன்பாபுவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விசாகப்பட்டினம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவிற்கு  சொந்தமான லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் சார்பில் சலீம் என்ற படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதாசிரியர் ஒய்.வி.எஸ்.சவுத்ரி என்பவருக்கு மோகன்பாபு ₹40.50 லட்சத்துக்கு கடந்த 2010ம் ஆண்டு காசோலையை வழங்கினார். அந்த காசோலையை பெற்றுக்கொண்ட ஒய்.வி.எஸ்.சவுத்ரி வங்கியில்  செலுத்தினார். ஆனால் நடிகர் மோகன் பாபு வங்கி கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆனது. இதையடுத்து மோகன் பாபுவிடம் பல முறை சவுத்ரி  பணம் குறித்து கேட்டார். ஆனால் மோகன்பாபுவிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எலமன்ச்சிலி  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை நீதிபதி விசாரித்து நடிகர் மோகன்பாபுவிற்கு  ஓராண்டு சிறை தண்டனையும், ₹41 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், மேலும் ₹10 ஆயிரம் அபராதமாக செலுத்தவும்  உத்தரவிட்டார். மேலும்,  பணம் செலுத்தாவிட்டால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் மோகன்பாபு பணத்தை செலுத்தி விடுவதாக நீதிமன்றத்தில்  தெரிவித்து முன்ஜாமீன் கேட்டு மனு அளித்தார். நடிகர் மோகன் பாபு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஜெகன்  மோகன் ரெட்டி முன்னிலையில் இணைந்து தொடர்ந்து சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறாக பேசி வந்தார். இதற்கிடையே செக் மோசடி வழக்கில்  அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Czech ,Mohan Babu ,Visakhapatnam , Czech fraud, Mohan Babu's, jail
× RELATED சிறைத்தண்டனை வழங்குவதைப்போல...