கொடநாடு கொலையில் முதல்வரை சம்பந்தப்படுத்தி திமுக தலைவர் பேசியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை விவகாரத்தை முதல்வர் எடப்பாடியுடன் சம்பந்தப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ள அறிவுரையில் நிரூபிக்கப்படாத, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தகூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொள்கிறார்கள். கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசவோ, எழுதவோ அந்த குற்றச்சாட்டை முன்வைத்த மாத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்டாலின் மட்டும் அது தொடர்பாக பொது வெளியில் போல பேசி வருகிறார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் மாதம் 22ம் தேதி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு ேதர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த மனுவை தாக்கல் செய்ய முடியும். தேர்தல் ஆணையத்தின் விதிகளில் வேட்பாளருக்கு எதிராகத்தான் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளருக்கு எதிராக எதுவும் பேசவில்லையே. எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும் என்று கேள்வி எழுப்பினர்.

 அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முசிறி திமுக வக்கீல்கள் பிரிவு மாவட்ட செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏப்ரல் 3ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஆணையம் உரிய முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், அதிமுக அளித்த புகாரில் ஆணையம் நடவடிக்கை எடுத்துவிட்டதால் மேற்கொண்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேர்தல் ஆணைய விதிகளில், வேட்பாளருக்கு எதிராகத்தான் ஆதாரமற்ற அல்லது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. மனுதாரர் பாபுமுருகவேல் கூறும் குற்றச்சாட்டில், பேசியவரும் வேட்பாளர் இல்லை, யாரைப்பற்றி பேசினாரோ அவரும் வேட்பாளர் இல்லை. மனுதாரர் குற்றச்சாட்டு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானதாக கருத முடியாது என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Chief Minister ,DMK ,Kodanad ,Madras High Court , Kodandad murder case, DMK, Madras High Court
× RELATED 3 கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது