×

மூல நோயாளி போல் நடித்து ரூ.23 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை: மூல நோயாளி போல் நடித்து ரூ.23 லட்சம் தங்கம் கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் பெருமளவில் கடத்தல் தங்கம் வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அதிகாரிகள் அதில் வந்த அனைத்து பயணிகளின் உடமைகளையும் தீவிரமாக சோதனையிட்டனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த முகமது யூசுப் (38) என்பவர் துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது முகமது யூசுப் தன்னிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் ஏதும் இல்லை. வேண்டுமென்றால் என்னுடைய அனைத்து போருட்களையும் சோதனை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி, அவராகவே தன்னுடைய பை, சூட்கேஸ் ஆகியவற்றை திறந்து காட்டினார். அவர்களும் துருவித்துருவி சோதனை நடத்தினர். ஆனாலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.

எனவே, அவரை தனியறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அவரது உள்ளாடைக்குள் ரப்பர் ஸ்பாஞ்சை பந்து போல் உருட்டிக் கட்டி மறைத்து வைத்திருந்தார். அதை சுங்க அதிகாரிகள் சோதனைக்காக எடுக்க முயன்றபோது, எனக்கு மூல நோய் உள்ளது. அதற்காக மருந்து வைத்து கட்டப்பட்டுள்ளது. அதை எடுக்காதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், ரப்பர் ஸ்பாஞ்சை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 7 தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த எடை 700 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.23 லட்சம். தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது யூசுப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : smuggler ,patient , patient, gold smuggler, arrested
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...