×

தேனிக்கு பிரதமர் மோடி வரும் நாளன்று 2.25 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டிற்கு தலா ரூ.10 ஆயிரம்: அதிமுகவின் மெகா திட்டம்

தேனி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து வரும் 13ம் தேதி பிரதமர் மோடி தேனியில் பிரசாரம் செய்ய உள்ளார். அன்றைய தினம் 2.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க அதிமுக மெகா திட்டம் தீட்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்தபோது ‘மோடியா, லேடியா’ என அரசியல் அதிகாரப்போட்டி  இருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அதிமுக, மோடி சொல்படி செயல்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜவோடும், ஜெயலலிதாவை அரசியல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையில்  மிக மோசமாக வசைபாடிய பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் எதிர்ப்பால் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்குமார், வெற்றி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரின் வற்புறுத்தலால் வரும் 13ம் தேதி ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து  பிரதமர் மோடி தேனியில் பிரசாரம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தேனி வருவதால் மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.500 வரை கொடுத்து கூலிக்கு ஆட்களை ஏற்றிவர திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், மோடி வரும்பேது அவரை உற்சாகப்படுத்த தேனி மக்களவை தொகுதியில் வசிக்கும் சுமார் 2.25 லட்சம் குடும்பத்தினருக்கு தலா வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து பிரதமர் கூட்டத்திற்கு ஆட்களை கூட்டி அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும், 2.25 லட்சம் குடும்பங்களுக்கு பணம் கொடுப்பதன் மூலமாக ஒரு குடும்பத்திற்கு நான்கு ஓட்டுக்கள் வீதம் சுமார் 9 லட்சம் ஓட்டுக்களுக்கு பணம் கொடுத்து விட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணம் பட்டுவாடாவுக்கு பிறகு ஏப். 14ம் தேதி முதல் ஏப். 16ம் தேதி வரை வாக்கு சேகரிப்பு பணியில் முழுமையாக ஈடுபட அதிமுக மெகா திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் ஊழியர் கூட்டங்கள் என்ற பெயரிலும், வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க வரும் தொண்டர்கள் என்ற பெயரிலும் தேர்தல் விதியை மீறி பணத்தை வாரியிறைத்து வருகின்றனர். இதை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள எந்த பறக்கும் படையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி தேனி வரும்போது அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிமுக  பணப்பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்துமா என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,visit ,Theni ,Modi , Prime Minister Modi, Theni,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...