×

வயநாட்டில் ராகுலை தோற்கடிக்க கம்யூனிஸ்ட்கள் முயற்சி எடுக்கும்: சுதாகர் ரெட்டி அதிரடி பேட்டி

‘‘வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடிக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்து முயற்சிகளும் எடுக்கும். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை வாபஸ் பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார். கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி.சுனீர் என்பவரை ஆளும் இடது முன்னணி நிறுத்தியிருந்தது. இந்நிலையில் இத்தொகுதியில் ராகுல் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆத்திரம் அடையச் செய்தது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஐதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: வயநாட்டில் ராகுல் காந்தி நிறுத்தப்படுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் போராடுவோம். இந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்போம். அங்கு பிரசாரம் செய்ய நான் 10ம் தேதி செல்கிறேன். அங்கு எங்கள் கட்சி வேட்பாளரை வாபஸ் பெறும் கேள்விக்கே இடமில்லை. பா.ஜ வலுவாக உள்ள கர்நாடகா அல்லது பிற மாநிலத்தில் உள்ள தொகுதியை  ராகுல் காந்தி தேர்வு செய்திருக்கலாம். இந்த போட்டி நல்ல முடிவை ஏற்படுத்தப் போவதில்லை.

நாடு முழுவதும் பாஜ.வுக்கு எதிரான அணியை திரட்டுவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த நேரத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்திருக்கக் கூடாது. இது ராகுல் காந்திக்கு நல்லதல்ல. இது பாஜ.வுக்கு எதிரான அணியை வருத்தமடையச் செய்யும்.  காங்கிரஸ் கட்சியின் பிற வேட்பாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவதற்கும், ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எதிர்த்து போட்டியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. வயநாடு தொகுதி காங்கிரசுக்கு பாதுகாப்பான தொகுதி அல்ல. கடந்த முறை அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனாலும், அது பாதுகாப்பான தொகுதி அல்ல. இரண்டாவது தொகுதியில் ராகுல் போட்டியிடுவதால், அமேதி தொகுதி வெற்றியில் ராகுல் உறுதியாக இல்லை என மக்கள் நினைப்பது இயல்பான விஷயம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Communists ,Rahul ,Wayanad ,interview ,Sudhir Reddy , Rahul, Communists, Sudhir Reddy,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...