×

பல்வேறு சாலை திட்டப் பணிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய அறிவிப்பு வெளியான பிறகும் பத்திரப்பதிவு

* பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் * பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: பல்வேறு சாலை திட்டப் பணிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய அறிவிப்பு வெளியான பிறகும், பொதுமக்களை ஏமாற்றி மோசடி கும்பல் பத்திரம் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம், ேகாடிக்கணக்கில் மோசடி கும்பல்  பணம் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 63 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் உள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலை மட்டும் 5,324 கி.மீ. இந்த சாலைகள் வாகன பயன்பாடு எண்ணிக்கைகேற்ப அகலப்படுத்தப்படுகிறது.  அதாவது, இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாகவும், நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை சாலை அகலப்படுத்துவது, புதிதாக சென்னை சுற்றுவட்ட சாலை அமைப்பது, திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைப்பது என  பல்வேறு சாலை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சாலை பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, எந்தெந்த சாலைககளில் நில ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை  சார்பில் அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. அவ்வாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியானவுடன் அந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதன்பிறகு நெடுஞ்சாலைத்துறை சார்பில்  நிலத்தின் மதிப்பு நிர்ணயம் செய்து உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படுகிறது.

முன்னதாக, நில ஆர்ஜிதம் அறிவிப்பு வெளியானவுடனேயே பத்திரப்பதிவுத்துறைக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் எழுதப்படுகிறது. அந்த கடிதத்தில், நில ஆர்ஜிதம் செய்யப்பட இருப்பதால், அந்த நிலத்தில் பத்திரம் பதிவு  செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுவும், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி  வரையிலான சாலை பணிகளுக்கு நில ஆர்ஜிதம் அறிவிப்பு வெளியிட்டு 4 மாதங்களுக்கு பிறகும், தற்போது வரை அந்த சாலை அமைக்க ஆர்ஜிதம் செய்யப்படவுள்ள நிலங்களை பத்திரம் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த பணியில் சார்பதிவாளர்கள் சிலர் ேமாசடி கும்பலுடன் ைககோர்த்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சிலர் கூறும் போது, ‘மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில்  வெளியானது. அதன்பிறகு, இந்த நிலங்களை பத்திரம் பதிவு செய்யக்கூடாது. ஆனால், மோசடி கும்பல் பொதுமக்கள் சிலரை ஏமாற்றி அவர்களுக்கு சொற்ப ெதாகை பணம் கொடுத்து, அவர்களது நிலத்தை பதிவு செய்து  வருகின்றனர். குறிப்பாக, நிலத்திற்கு நான்கு முதல் இரண்டு மடங்கு அரசு சார்பில் பணம் தரப்படுகிறது. ஆனால், பொதுமக்களிடம் பாதி பணத்தை கொடுத்து நிலத்தை மோசடி கும்பல் பதிவு செய்து கொண்டு, கோடிக்கணக்கில்  பணம் சம்பாதிக்கின்றனர். இதற்கு சார்பதிவாளர்கள் சிலர் உடந்தையாக இருக்கின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement , For various, road projects, announcement ,land registration,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...