×

3வது அணி சாத்தியமானால் எங்க டாடி தான் பிரதமரு..... கேடிஆர் போடும் கணக்கு பலிக்குமா?

மத்தியில் பாஜ, காங்கிரஸ் கூட்டணி அல்லாத 3வது அணியே ஆட்சி அமைக்கும் என தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) மிக நம்பிக்கையுடன் உள்ளது. அக்கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகரராவின் மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், பிராந்திய கட்சிகள் இணைந்தே மத்தியில் ஆட்சி அமைக்கும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 2014ல் இருந்த அளவுக்கு பாஜ இப்போது வலுவாக இல்லை. அப்போது 283 இடங்களில் வென்ற பாஜ, இந்த முறை 150 சீட்களை தாண்டாது. அவர்களின் பிரசாரத்தை பாருங்கள், புல்வாமா தாக்குதல், டிஆர்டிஓவின் செயற்கைக்கோளை தகர்க்கும் ஏவுகணை சாதனை போன்றவற்றைதான் ஓட்டாக்க பார்க்கிறார்கள். 5 ஆண்டில் அவர்கள் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதால் பிரசாரத்தில் வளர்ச்சிப் பணிகள் பற்றி பாஜகவால் பேச முடியவில்லை. காங்கிரசும் நல்ல எதிர்க்கட்சியாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் இம்முறை 100 சீட் வெற்றி பெறுவதே சந்தேகம்தான். எனவே, மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக்கப் போகின்றன. அப்படியிருக்கையில், தேர்தலுக்கு முன்பாகவே மாநில கட்சிகள் எதற்காக பாஜ, காங்கிரசின் பின்னால் சென்று அவர்களை பெரிதாக காட்ட வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை விட காங்கிரஸ் வலுவானதா? தமிழ்நாட்டில் அதிமுக தயவில்லாமல் பாஜ ஒரு இடத்திலாவது வென்று விட முடியுமா? ஆகவே, தேர்தலுக்கு பிறகு பாஜ, காங்கிரஸ் அல்லாத 3 அணி நிச்சயம் சாத்தியமாகும்.

உபியில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி 50-55 இடங்களை வெல்லும், தெலங்கானாவில் டிஆர்எஸ் 16, கூட்டணியில் உள்ள ஏஐஎம்ஐஎம் ஒரு இடத்தில் வெல்லும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 30 அல்லது அதற்கு மேல், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் 20 இடங்களில் வெல்லும். இதுவே 120-130 சீட் வந்து விட்டது. மற்ற மாநில கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வரும். கூட்டி கழிச்சு பார்த்தால் கிட்டத்தட்ட 160-170 எம்பிக்கள் மாநில கட்சிகள் வசம் இருப்பார்கள். அந்த சமயத்தில் மாநில கட்சிகள் மத்தியில் ஆட்சியை அமைக்கும். அப்போது, பாஜ, காங்கிரசுக்கு 3வது அணிக்கு ஆதரவு தருவதைத் தவிர வேறு வழி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
கேடிஆர் சொல்வது போல் ஒருவேளை 3வது அணி சாத்தியமாகி விட்டால் யார் பிரதமராக நிறுத்தப்படுவார் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ‘‘அது தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவாக கூட இருக்கலாம். நிர்வகிக்கும் திறன் கொண்ட கேசிஆர், ஏன் நாட்டை வழிநடத்தக்கூடாது?’’ என்றார். ‘‘வெறும் 16 எம்பிக்களுடன் எப்படி பிரதமர் பதவியை பெற முடியும்’’ என்ற கேள்விக்கு, ‘‘44 எம்பிக்களை கொண்ட ராகுல் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார்.  16 எம்பிக்களுடன் சந்திரசேகரராவ் பிரதமர் பதவிக்கு வருவது பேராசை என்றால், ராகுல் விஷயத்திலும் பேராசை என்பதே எனது கருத்து’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,Daddy , KTR, KCR,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...