×

ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் இல்லாத இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தீப்பக்குளம் பகுதியை சேர்ந்த தினேஷ் சரண் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இடைத்தரகர்கள் பயணிகளிடம் அதிகமான கட்டணங்களை வசூலிக்க முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் ஏஜெண்ட்டுகள் மற்றும் இடைத்தரகர்கள், பயணிகளை தாங்கள் விரும்பும் பேருந்துகளில் பயணிக்க விடாமல் அட்டூழியம் செய்வதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்படும் எனக் கூறி கட்டாயப்படுத்தி பயணிகளை அவர்கள் பேருந்துகளில் ஏற்றுவதாகவும், ஆனால் அந்தப் பேருந்துகள் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னரே புறப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மனுவில் புகார் கூறப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அண்ணாநகர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த இடைத்தரகர்கள் மற்றும் ஏஜெண்ட்டுகள் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து ஆம்னி பேருந்து நிலையங்களிலும் அங்கீகாரம் இல்லாத இடைத்தரகர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுதவிர மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு தனியாக காவல் நிலையம் திறக்க மதுரை மாநகர காவல் ஆணையரும், டிஜிபி-யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் காவல்துறைக்கு 2 வாரக்கால அவகாசம் அளித்து இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,bus stations ,Omni ,brokers , Amni tremor,intermediary,high court Madurai branch
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...