×

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு ஐ.பி.எல் சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

அத்துடன், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஹாட்ரிக் தோல்வியை பெற்றது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் (ஸ்லோ ஓவர் ரேட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஐபிஎல் விதிகளின் அடிப்படையில் அணியின் கேப்டனுக்கு தண்டனையாக அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மீண்டும் இதே தவறு நடந்தால், கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம், வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொடர் தோல்விகளுக்கு இடையே அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதால் அந்த அணி நிர்வாகம் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இதே காரணத்துக்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ajinkya Rahane ,Rajasthan Royals ,IPL , Rajasthan Royals, Ajinkya Rahane, fine, IPL
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்