×

நச்சலூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை இல்லாததால் சாகுபடி பாதிப்பு

கரூர்: நச்சலூர் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை இல்லாததால் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டுவாய்க்கால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் காவிரியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும் வாய்க்காலை மேம்பாடு செய்யும் திட்டம் செயல்படுத்தவில்லை. இதனால் கரூர் மாவட்ட காவிரி கடைமடைக்கு நீர் போய் சேரவில்லை. மாயனூர் கட்டளைமேட்டு வாய்க்காலில் இருந்து தாயனூர் வரை 60 கிமீ தூரம் இந்த வாய்க்கால் அமைந்துள்ளது. மொத்த பாசனம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர். ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் 1937ம் ஆண்டில் இந்த வாய்க்காலை வடிவமைத்துக் கட்டியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்கவில்லை. 2018ல் வாய்க்காலை சீரமைத்திருந்தால் கடைமடை வரை தண்ணீர் கிடைத்திருக்கும்.

பலமுறை குறைதீர் கூட்டங்களிலும் அதிகாரிகளிடமும் வலியுறுத்தியும் நிறைவேறாத கோரிக்கையாக போய் விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த வாய்க்கால் பாசனம் முழுமைக்கும் 411 கன அடி நீர் தேவை. நச்சலூருக்கு கீழ் உள்ள கடைமடை பகுதிகளான கவுண்டம்பட்டி, சூரியனூர், மேலப்பட்டி, முதலைப்பட்டி, திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு உள்ளிட்ட 10 ஆயிரம் ஏக்கரில் தொடர்ந்து சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை. முதல்வருக்கும் கோரிக்கை மனுக்களை விவசாய சங்க பிரதிநிதிகள் அனுப்பியுள்ளனர். கட்டளைமேட்டு வாய்க்கால் 2 அடி மண் மேடிட்டதை பொதுப்பணித்துறை கணக்கில் எடுக்காமல் இதனையும் சேர்த்துத்தான் தண்ணீர் விடுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த தலமட்டம் அளவுக்கு வாய்க்காலை தூர் வார வேண்டும்.

நேரடி பாசனம் 20,550 ஏக்கருக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மானாவாரி நிலங்களுக்கு குழாய்கள் மூலமாகவும், நீரேற்று பாசனம் செய்வதையும் கணக்கில் சேர்த்து கொள்கின்றனர். அதிகாரிகள் திறந்து விட்டதாக கூறும் நீர் 35 கிமீ வரை தான் வருகிறது. 180 கன அடி நீர் நச்சலூருக்கு கீழே வந்தால் மட்டுமே கடைமடையில் விவசாயம் செய்ய முடியும். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து திருச்சி போன்ற மாவட்டங்களில கண்காணிப்பு செய்யப்படுகிறது. இங்கும் அது போல நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர், திருச்சி எம்பி தொகுதியிலும், குளித்தலை பெரம்பலூர் எம்பி தொகுதியிலும் இப்பகுதி வருகிறது. ஒவ்வொரு முறையும் ஓட்டுக்கேட்டு வரும்போது வாக்குறுதி மட்டுமே அளிக்கப்படுகிது. வெற்றி பெற்றதும் கிடப்பில் போடப்பட்டு வருவதாக கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nachalur Stallion ,area , Nachalur, water, cultivation
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...