×

பர்கூர் அருகே மழை வேண்டி ஊரை காலி செய்த 2 ஆயிரம் கிராம மக்கள் : தோட்டத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி வழிபாடு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு கிராம மக்கள் சென்றனர். கிருஷ்ணகிரி  மாவட்டம் பர்கூர் அருகே மேடுகம்பள்ளி, கச்சாலிகானூர், மூலக்கொல்லை ஆகிய  பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி  ஏற்பட்டு, கால்நடைகள் வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த  15 ஆண்டுகளாக மாரியம்மன் பண்டிகையும் நடத்தப்படாமல் உள்ளது. அவ்வாறு நடத்த  முற்பட்டால் அதற்கு ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, சாமி  குத்தம் உள்ளதால்தான் போதிய மழையும் இல்லாமல், மாரியம்மன் பண்டிகை  செய்யவும் முடியாமல் உள்ளதாக ஒருவருக்கு சாமி அருள் ஏற்பட்டு கூறியுள்ளார்.  

இதையடுத்து இந்த மூன்று கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஒன்று கூடி,  ஒரு நாள் மட்டும் ஊரை காலி செய்துவிட்டு, அருகில் மலை பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி, மாலை வீடு திரும்புவது என முடிவு செய்யப்பட்டது. வலசை  என்று கூறப்படும் இந்நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி, நேற்று ஊரில்  அனைவரும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு, ஊர் எல்லையில் தடுப்பு ஏற்படுத்தி,  உணவு சமைப்பதற்கான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு தங்களது ஆடு,  மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் பிடித்துக்கொண்டு சுமார் 2 ஆயிரம் பேர் மலை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர்.

அதிகாலை 6 மணிக்கு ஊர்வலமாக  புறப்பட்ட இவர்கள் தோட்டத்திற்கு சென்று அங்கேயே அவரவர்கள் சமையல் செய்து  சாப்பிட்டனர். அத்துடன் அங்கேயே சிறியதாக குடிசை அமைத்து, அதில் அம்மன்  சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் தங்கள் எடுத்து  சென்றிருந்த உணவு பொருட்களைக்கொண்டு சமைத்து, சாமிக்கு படையலிட்டு,  மாவிளக்குடன் ஊர்வலமாக சென்று  வழிபட்டனர். பின்னர்  மாலை 6 மணிக்கு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட பொதுமக்கள் ஊர் எல்லையில்  ஒரு ஆட்டை வெட்டி, சிறப்பு பூஜை செய்து, தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : town ,Bargar ,garden , Bargur, Rain, Village People
× RELATED புதுகும்மிடிப்பூண்டியில் சோகம்...