×

எருமாபாளையத்தில் தண்ணீர் பற்றாக்குறை : குடங்களுடன் மாநகருக்கு படையெடுக்கும் மக்கள்

சேலம்: எருமாபாளையம், சன்னியாசிகுண்டு ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையால், காலி குடங்களுடன் பொதுமக்கள் மாநகர் பகுதிக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. சேலத்தில் உள்ள ஏரி,குளங்களில் நீர்வரத்து இல்லாததால், போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால், போர்வெல்களை நம்பி இருக்கும் ஊராட்சி பகுதி மக்கள், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் எருமாபாளையம், சன்னியாசிகுண்டு ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தலா 9 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, போர்வெல் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடும் வறட்சி காரணமாக, தற்போது போர்வெல்லில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.  இதனால், ஒரு கிமீ தொலைவு கடந்து வந்து, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 மற்றும் 57வது வார்டுகளில் உள்ள வீடுகளில் ஒரு குடம் தண்ணீர் 1 என பிடித்து செல்கின்றனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘எருமபாளையம், சன்னியாசிகுண்டு ஊராட்சியில் நல்ல தண்ணீர் விநியோகம் கிடையாது. இதனால், குடிப்பதற்கு 500 கொடுத்து லாரி மூலம் 1000 லிட்டர் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறோம். தற்போது கோடை என்பதால், குடிநீருக்கு அலைய வேண்டியுள்ளது. எங்களது ஊராட்சிக்கு மேட்டூர் குடிநீர் வழங்கும்படி ஆளும்கட்சி நிர்வாகிகளிடம் மனு கொடுத்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. குடிநீருக்காக பைபாஸ் சாலையை தாண்டி, மாநகராட்சி பகுதிக்கு சென்று காசு கொடுத்து பிடித்து வருகிறோம்,’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : town , Erumapalaiyam, water, people
× RELATED ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்