×

துண்ட காணோம்... துணிய காணோம்: அரசியல்வாதிகளை ஓட விடும் மாணவர்கள்

இம்முறை மக்களவை தேர்தலில் ஒரு கோடி இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். இவர்களின் வாக்கு, தேர்தல் முடிவில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும் என்பதால் கல்லூரி மாணவர்களை நோக்கி  வேட்பாளர்கள் படையெடுக்கிறார்கள். கேரளாவில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதருரூம், பாஜ சார்பில் முன்னாள் ஆளுநர் கும்மானம் ராஜசேகரனும், சிபிஐ சார்பில் எம்எல்ஏ திவாகரனும்  போட்டியிடுகிறார்கள்.இவர்கள் மூவரும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்கள். அப்போது மாணவர்கள் அனைவரும் அவர்களை ரவுண்டு கட்டி கேட்கும் கேள்விகள் கேட்டு திணறடிக்கின்றனர். ‘‘அண்ணே...  நீங்க ஜெயிச்சு எம்பியானா, எங்களுக்கு எப்படி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவீங்க?’’ என்பதுதான் அவர்களின் பிரதான கேள்வியாக உள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் திவாகரன் அளித்த பதிலில், ‘தம்பிகளா... 2  கோடி வேலைவாய்ப்பை தருவதாக பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார். நான் எம்பி.யானால், உங்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மாணவர் பிரச்னையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்வேன். ஜேஎன்யு  உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். அவற்றை நிறுத்துவேன்’’ என்றார்.

மதச்சார்பின்மை, ஊழல் தொடர்பாக மாணவர்கள் கேட்ட கேள்விக்கு சசிதரூர் அளித்த பதிலில், ‘‘மோடி அரசால் நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒற்றுமையான  இந்தியாவை மீட்போம்’’ என்றார்.  ‘தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு கும்மானம் ராஜசேகரன் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில், உயர் நீதிமன்ற கிளை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருவேன்’’ என்றார்.  மாணவர்கள் கேட்கும் இதுபோன்ற சரமாரி கேள்விகளால், வேட்பாளர்கள் அந்த பக்கமே போகாமல் ஓட்டம் பிடிக்கின்றனர்.அதே நேரம், வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை எல்லாம் நம்ப, மாணவர்களும் தயாராக இல்லை.  ‘‘இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமா இருக்கிறதால, எல்லோரும் கல்லூரிக்கு வந்து ஒட்டு கேட்கறாங்க. ஆனா,  எலக்‌ஷனுக்கு அப்பறம் எங்கள சீண்டக் கூட மாட்டாங்க...’ என்கின்றனர் அவர்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : politicians , Do not weep,Find , cloth, politicians
× RELATED சொல்லிட்டாங்க...