×

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: விஜயவாடாவில் ராகுல் உறுதி

விஜயவாடா,: ‘‘மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்’’ என அம்மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் உறுதி அளித்துள்ளார்.ஆந்திராவில் வரும் 11ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ளது. இங்கு ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு  அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்களை நடந்தி வருகிறார். சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றியதால் மத்தியில் பாஜ. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மாநில பிரிவினையால் ஆந்திராவில் செல்வாக்கை இழந்த காங்கிரஸ் இம்முறை தனித்து களமிறங்குகிறது.  இந்நிலையில், ஆந்திராவில் முதல்முறையாக விஜயவாடாவில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது பிரசாரத்தை  நேற்று தொடங்கினார். அவர் பேசியதாவது:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என உறுதி அளித்தது பிரதமர் மோடிதான், மன்மோகன் சிங் அல்ல. ஆனால், மோடி உங்களை ஏமாற்றி விட்டார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயம் ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்குவோம்.
அனைவரும் மகிழ்ச்சியான, ஒற்றுமையான ஒரே இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. ஆனால், பிரதமர் மோடி 2 வெவ்வேறு இந்தியாவை விரும்புகிறார். ஒன்று, அனில் அம்பானி, மெகுல் சோக்சி போன்ற  பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கானது. எனவே, இந்த 2019ல் ஏழ்மைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்த நாங்கள் முடிவு செய்து விட்டோம்.

ஏழைகள், பலவீனமானவர்களுக்கு எதிராக மோடி போர் தொடுத்தால், நாங்கள் ஏழ்மைக்கு எதிராக போர் தொடுப்போம். மக்களுக்கு நியாய் (குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டம்) என்ற நியாயத்தை தருவோம். நியாய் என்பது  ஏழ்மைக்கு எதிரான வன்முறையில்லாத ஆயுதம். ஏழ்மையை போக்க ஐமு கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றையெல்லாம் மோடி நசுக்கிவிட்டார். வேலை உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு  திட்டம் போன்றவற்றை புரிந்து கொள்ளாமல், அவற்றை பலவீனமாக்கி
விட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.ஆந்திராவில் பிர சாரத்தை முடித்துக் கொண்ட ராகுல், நேற்று மாலை கர்நாடகாவில் பிரசாரம் மேற் கொண் டார்.

பிரைம் மினிஸ்டரல்ல
பப்ளிசிட்டி மினிஸ்டர்
செய்தி நிறுவனத்துக்கு ராகுல் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி அகந்தை பிடித்தவர். எந்த விஷயத்திலும், யாருடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார். அதனால்தான் இப்போது  தடுமாறுகிறார். அதிகார ஆசை கொண்ட அவர், சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அதற்காக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பின்னடைவு, விவசாயிகள் பிரச்னை போன்ற  உண்மையான பிரச்னைகளை பேச அவர் முன்வருவதில்லை. 2014ல் அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர் பிரைம் மினிஸ்டர் என்பதை விட தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்ளும்  பப்ளிசிட்டி மினிஸ்டராகத்தான் உள்ளார்’’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,Vijayawada , Congress rule, Special status , Andhra Pradesh, Rahul, Vijayawada
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு