×

லாலு யோசனைப்படி காங்கிரசில் சேர்கிறேன்: சத்ருகன் சின்ஹா பேட்டி

புதுடெல்லி: லாலு ஆலோசனைப்படி காங்கிரசில் சேர்வதாக நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:நீண்டகாலம் இருந்த பா.ஜ கட்சியிலிருந்து வெளியேறுவது வருத்தமாகத்தான் உள்ளது. அங்கு கட்சி மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர்கள் நடத்தப்பட்ட விதம் என்னை  வருத்தம் அடையச் செய்தது. பா.ஜ கட்சியில் முன்பு ஜனநாயகம் இருந்தது. தற்போது அங்கு சர்வாதிகாரம் நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி  தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலர் தங்கள் கட்சியில் சேரும்படி கூறினர். எனது மக்களவை தொகுதி பீகாரில் உள்ள பாட்னா ஷாகிப். அங்கு கடந்த 2014ம் ஆண்டு சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன். பா.ஜ  ஆதரவில் வெற்றி பெறவில்லை. இந்த முறை நான் அதே தொகுதியில் என் முந்தைய சாதனையை முறியடிப்பேன்.

மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். நாட்டின் சுதந்திர இயக்கத்தில் அந்த கட்சி பெரும் பங்கு ஆற்றியுள்ளது. மேலும், காங்கிரஸ் உண்மையான தேசிய கட்சி. இதில் சேருவது குறித்து எனது குடும்ப நண்பர் லாலுவிடம் ஆலோசித்தேன். அவரும் காங்கிரஸ் கட்சியில் சேரும்படி கூறினார். இதனால் காங்கிரசில் சேர முடிவு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalu ,Congress ,interview ,Sathurugan Sinha , Lalu's idea,joining Congress,Sathrukan Sinha
× RELATED லாலுவுக்கு கைது வாரண்ட்