×

துப்பாக்கி சூடு நடத்திய தேர்தல் பார்வையாளர் போதையில் இருந்ததால் பணியிலிருந்து நீக்கம்

அரியலூர்: போதையில் வானத்தை நோக்கி 9 முறை சுட்ட தேர்தல் அதிகாரியால் அரியலூரில் அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஹேம்ந்த் மிக்ல். ஐபிஎஸ் அதிகாரியான இவர் அம்மாநிலத்தில் ஐஜியாக பணியாற்று வருகிறார். கடந்த 10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் தேர்தல் மேற்பார்வையாளராக ஹேம்ந்த் மிக்ல் நியமிக்கப்பட்டார். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன் ஹேம்ந்த் மிக்ல் அரியலூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு தங்கியபடியே தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.

இவருக்கு கீழ் மணிபாலன் என்ற காவலர் மற்றும் ஒரு கேமராமேன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் பறக்கும் படையினர் பணிகளை மேற்பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். இன்று காலை 6 மணியளிவில் திடீரென அரியலூர் சுற்றுலா மாளிகையில் இருந்து தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் அரியலூர் எஸ்.பி. சீனிவாசன், பெரம்பலூர் எஸ்.பி திஷாமித்தல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தேர்தல் மேற்பார்வையாளர் ஹேம்ந்த் மிக்ல் மற்றும் காவலர் மணிபாலனிடம் விசாரித்தனர். அப்போது, ஹேமந்த் மிக்ல் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தள்ளாடியபடியே போலீசாரிடம் பதிலளித்தார். இதையடுத்து, காவலர் மணிபாலனிடம் விசாரித்தனர். அப்போது அவர், சார் என்னிடம் வந்து துப்பாக்கி சுடுகிறதா என்று சரிபார்த்து தர்றேன் என்று கேட்டார். அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவரை நம்பி துப்பாக்கியை கொடுத்தேன். ஆனால், அவர் போதையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. துப்பாக்கியில் 10 புல்லட் இருந்தது. அவர் வானத்தை நோக்கி 9 முறை சுட்டார் என தெரிவித்துள்ளார். அதன்பேரில், ஹேமந்த் மிக்ல் மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போதையில் துப்பாக்கியால் சுட்டதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிதம்பரம் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election viewer , Firing, poll viewer, addictive
× RELATED வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு