ஷீலா தீட்சித்தை வம்புக்கு இழுக்கும் ஆம் ஆத்மி அப்போ ஒரு பேச்சு... இப்போ ஒரு பேச்சா...

டெல்லி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காரணம் ஆம் ஆத்மி. ஆளும்கட்சி என்பதால் மட்டுமல்ல, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் வேட்பாளரை முதலில் அறிவித்த கட்சி என்ற அடிப்படையிலும் தான். அதோடு பிரசார  களத்திலும் முன் நிற்கிறது. காங்கிரஸ் கூட்டணி அமையுமா? அமையாதா? என்றெல்லாம் ஏங்கவில்லை. வந்தால் சந்தோஷம் என்ற மனநிலையில் இருக்கிறார் கெஜ்ரிவால். இப்போது கெஜ்ரிவாலின் புதிய குடைச்சல் காங்கிரஸ்  கட்சியின் டெல்லி தலைவர் ஷீலா தீட்சித். கெஜ்ரிவாலுக்கு முன் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். அஜய் மாகென் தலைவராக இருக்கும் வரை காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருந்தார்  கெஜ்ரிவால். ஆனால் ஷீலா வந்ததும் நம்பிக்கை வந்தது. ஆனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணியே வேண்டாம் என்று ஷீலா கதவடைத்து விட்டார். காரணம் இன்னும் 9 மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்தான்  ஷீலாவின் கண்முன் வந்து போகிறது. ராகுல் ஆசைப்பட்டாலும் ஷீலா இடம் கொடுக்க மறுக்கிறார்.

கொதித்து போய்விட்டார் கெஜ்ரிவால். இப்போது பாஜ.வை அதிகம் திட்டுகிறாரோ இல்லையோ தினமும் ஷீலா தீட்சித்திடம் வம்பு இழுக்கிறார். அவரைப்போலவே ஆம் ஆத்மி நிர்வாகிகளும் ஒவ்வொரு பிரசாரத்திலும் ஷீலாவை  பிடிபிடியென பிடிக்கிறார்கள். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த தேர்தலை ஆம் ஆத்மி எதிர்கொள்கிறது. இதே கோரிக்கையை முதல்வராக இருந்தபோது வலியுறுத்தியவர்தான் ஷீலா  தீட்சித். ஆனால் ஒட்டுமொத்த பார்வையும் ஆம் ஆத்மி பக்கம் போவதை தடுக்க முழு மாநில கோரிக்கையை இப்போது வலியுறுத்த போவது இல்லை என்று திடீரென அறிவித்து விட்டார். இப்போது ஆம் ஆத்மியின் கோபம் ஷீலா மீது பாய்ந்துவிட்டது. டெல்லி ஆம் ஆத்மி தேர்தல் பொறுப்பாளர் கோபால்ராய் இதுகுறித்து கூறுகையில், ‘இதே கோரிக்கையை முதல்வராக இருந்தபோது வலியுறுத்தியவர்தானே ஷீலா  தீட்சித்? இப்போது அவருக்கு என்ன வந்துவிட்டது? தனது கொள்கையில் இருந்து இப்படி ‘யு டர்ன்’ அடிக்கிறார். அப்படி என்ன நிர்பந்தம் அவருக்கு? 2015 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் கூட டெல்லிக்கு முழு மாநில  அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என்று ஷீலா தீட்சித் வாக்குறுதி அளிக்கவில்லையா? டெல்லியின் முதல்வராக இருந்தவர் இப்படி பேசுவது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் அனைவரையும் முட்டாளாக்கப் பார்க்கிறார்’  என்று மனுஷன் பொரிந்து தள்ளிவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More