×

காட்பாடியில் விடிய, விடிய பரபரப்பு துரைமுருகன் வீடு, கல்லூரி, பள்ளிகளில் ஐடி திடீர் ரெய்டு

* ‘திராணியுள்ளவர்கள் நேரடியாக
எதிர்க்க வேண்டும்’ என ஆவேச பேட்டி

வேலூர்: காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீடு, கல்லூரி, பள்ளிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் எம்எல்ஏ வீடு உள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் ேநற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மனோஜ், முரளிதரன், சதீஷ் என்கிற 3 பேர் கொண்ட குழுவினர் வருமானவரித் துறை அதிகாரிகள் என்றுகூறி, அவரது வீட்டில் சோதனை நடத்த வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை. அவர் வருவதற்குள், வீட்டில் இருந்தவர்களின் அனுமதியுடன் அதிகாரிகள் ஹாலில் சென்று அமர்ந்திருந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்த துரைமுருகனிடம், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்தப்போகிறோம் என்றும் கூறினர். உடனடியாக, தன்னுடைய வழக்கறிஞர்களை துரைமுருகன் வரவழைத்தார். அவர்கள் அந்த குழுவினரின் அடையாள அட்டைகளை வாங்கிப்பார்த்தனர், அதில், ‘அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட தேர்தல் பார்வையாளர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் அவர்களிடம் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த வருமானவரித்துறை அதிகாரி விஜய் தீபன், என்னுடைய தலைமையிலான குழுவினர் தான் அவர்கள்’ என வழக்கறிஞர்களிடம் கூறினார். அதற்கு சோதனை நடத்துவதற்கான வாரண்ட் காண்பிக்குமாறு வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால் அது அவர்களிடம் இல்லை. இதனால் அவர்களை சோதனை நடத்த வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை.  தகவலறிந்து திமுகவினர் ஏராளமானோர் துரைமுருகன் வீட்டு முன்பு திரண்டனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வருமானவரித்துறை அதிகாரிகளின் மற்றொரு குழுவினர் சோதனை நடத்துவதற்கான வாரண்ட் கொண்டு வந்து துரைமுருகனிடம் வழங்கினர். பின்னர் சோதனை நடத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இவர்களுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துரைமுருகன் வீடு மற்றும் கார்கள் போன்றவற்றில் சோதனை நடந்தினர். அங்கு எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவடைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் கார்களில் கிளம்பி சென்றனர். இதேபோல் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் 2 பள்ளிகளில் 10 பேர் கொண்ட வருமானவரி துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் அங்குள்ள அறைகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த ரெய்டு குறித்து காட்பாடியில் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: என்னிடம் வருமானவரித்துறையினர் வந்திருப்பதாக கூறினார்கள். நானும் மாவட்ட செயலாளரும் வந்தோம். உட்கார்ந்திருந்தனர். யார் எனக்கேட்டதற்கு வருமான வரி அதிகாரிகள் என்றனர். ஆதாரம் கேட்டேன். கார்டை காட்டினர். கார்டை யார் வேண்டுமானாலும் காட்டலாம். என்றேன். உத்தரவை காட்டமுடியுமா என்றேன். நாங்கள் போகிறோம், தவறாக வந்துவிட்டோம் எனக்கூறினர். பின்னர் யாருடனோ பேசினார்கள். அதன்பிறகு பறக்கும் படை என்றார்கள். நீங்கள் யார் என தெரியாமல் நாங்கள் எப்படி அனுமதிக்கமுடியும். இரவு நேரத்தில் சோதனை செய்யக்கூடாது என சட்டம் இருக்கு. எப்படி அனுமதிப்பது மீறி உள்ளே வந்தால் எப்படி என்றேன். பின்னர் புறப்பட்டு சென்றார்கள். தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் ஆர்டருடன் வந்தார்கள். உத்தரவை காண்பித்த உடன் அனுமதித்தேன். எல்லா இடங்களிலும் பார்த்தார்கள். இப்போது ஒன்றுமில்லை என திரும்பி விட்டனர். இந்த நேரத்தில் வருமானவரிதுறையோ, மற்ற அதிகாரிகளோ சோதனையிடுவதற்கான காலமல்ல. தேர்தல் நேரம். கார்ப்ரேட் கம்பெனியல்ல. சாதாரண கல்லூரி நடத்துகிறோம். கடந்த மாதம் சோதனை நடத்தியிருக்கலாம். வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனை திசை திருப்ப வேண்டும். மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மிரட்டி பணிய வைக்கலாம் என நினைக்கிறார்கள்.

களத்தில் எதிர்க்க திராணியின்றி மத்திய, மாநில அதிகாரிகள் மூலம் கடைந்தெடுத்த கழிசடை அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் அதிகாரிகளை வைத்து முதுகில் குத்தப்பார்க்கிறார்கள். மக்களுக்கு இப்போது தெரிகிறது. மிரட்டுவது, பொய் வழக்கு, பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் திமுகவின் கடைசி தொண்டன் கூட பயப்படமாட்டான். மிசா, அடக்குமுறையை பார்த்தவர்கள். எதிர்க்க திராணியுள்ளவர்கள் நேரடியாக எதிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஆதரவு உள்ளது என்று ஓடிப்போய் வருமான வரித்துறை அதிகாரிகளை அனுப்பினால் பயந்துவிடுவார்கள், நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிலர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அரசியலில் கரை கண்டவர்கள் நாங்கள். இதனை பொருட்படுத்த மாட்டோம். ேமாடி, வருமான வரி அதிகாரிகளை ஏவிவிடுவதால் எதிர்க்கட்சிகளை அடக்கலாம் என நினைக்கிறார். மோடிக்கு ஜே என்று சொல்லிவிட்டு தப்பு கணக்கு போட்டவர்கள் அரசியலில் தோற்றுள்ளனர். மோடி ெசல்லரித்த தத்துவம். கதிர் ஆனந்த் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் குடியாத்தம்  அடுத்த  அனங்கநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் திமுக முன்னாள்  பொதுக்குழு  உறுப்பினர் சக்கரவர்த்தி. இவரது வீட்டில் நேற்று அதிகாலை 4.45  மணியளவில்  வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் திடீரென  நுழைந்தனர். அவர்களுடன் தேர்தல் பறக்கும்படையினரும் வந்து  இருந்தனர்.  இவர்கள் வெளியே நின்றுவிட்டனர். தொடர்ந்து வருமானவரித்துறை  அதிகாரிகள் மாலை 6.30 மணி வரை  சோதனை நடத்தி சில பத்திரங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் வாணியம்பாடியில் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் தேவராஜ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு சோதனை நடத்தி விட்டு எதுவும் இல்லை என்று புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் கண்டனம்
திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மத்திய அரசின்  அரசியல் பழிவாங்கும் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று அது  தமிழகத்தில் நீடிக்கிறது. மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம்,  ஆந்திரா, பீகார், கர்நாடகா என பல மாநிலங்களில் அரசியல் எதிரிகளை பாஜ அரசு  துன்புறுத்தி வருகிறது. மகன் வேட்பாளராக உள்ள நிலையில், திமுக பொருளாளர்  வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை கண்டிக்கத்தக்கது’ என  கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Katpadi ,house ,raid ,Vidyaru Thuramurukun ,schools , In Katpadi, duraimurugan house, college, it sudden raid in schools
× RELATED காட்பாடி டெல் நிறுவனத்தை...