×

மண் மணம் மாறாத அம்மன் திருவிழா கடும் விரதமிருக்கும் கிராமத்து பெண்கள்

* கருப்பட்டி இடிக்கும் ஆண்கள்

சுரண்டை : மண் மணம் மாறாமல் கொண்டாடப்படும் அம்மன் திருவிழாவிற்காக சேர்ந்தமரம் அருகே அருணாசலபுரத்தில் கிராம பெண்கள் கடும் விரதமிருந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சிக்குட்பட்டது அருணாசலபுரம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வடகாசி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் வழங்கப்படும் கருப்பட்டி கலந்த பச்சரிசி மாவு மற்றும் பானகம், சுற்றுவட்டாரத்தில் சிறப்பு பெற்றது.

இந்தாண்டு கோயிலில் பங்குனி திருவிழா, வருகிற ஏப்.7ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கிராம மக்கள் நலமுடன் வாழவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும், குறைவின்றி மழை பொழியவும் வேண்டி அருணாசலபுரம் கிராம பெண்கள் 41 நாள் விரதத்தை துவங்கினர். இவ்விழாவிற்காக 3 நாள் முதல் அதிகபட்சம் 41 நாட்கள் வரை விரதமிருப்பது வழக்கம்.

விரத நாட்களில் பெண்கள், பழங்கள், பானகம், இளநீர், உதிரி மாவு போன்றவற்றை மட்டுமே ஒருவேளை உணவாக சாப்பிடுகின்றனர். குறிப்பாக இளநீர் மற்றும் பானகத்தை ஒரே மூச்சில் எவ்வளவு குடிக்க முடியுமோ, அவ்வளவுதான் குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடிக்கக் கூடாது போன்ற கடுமையான விரதமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். விரதம் தொடங்கும் நாளன்று இரவு உரலில் பச்சரிசி மற்றும் கருப்பட்டி தனித்தனியாக குத்தி மாவாக்கி பிசைகின்றனர். விடியும் முன் விரதம் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர், ஊரில் உள்ள அனைவரது வீட்டிற்கும் சென்று இந்த பிரசாதத்தை வழங்குகின்றனர். காலம் மாறினாலும் பாரம்பரிய சம்பிரதாயங்களை முன்னோர் காட்டிய வழியில் இன்றும் தொடர்ந்து வருகின்றனர்.

உரலில் பச்சரிசியை பெண்களும், கருப்பட்டியை ஆண்களும் இடிப்பார்கள். இதை பார்ப்பதற்காகவே இளம் தலைமுறையினர் விடிய விடிய கண்விழித்து காத்திருப்பர். கிரைண்டர், மிக்ஸி என எவ்வளவோ வந்தாலும் இன்றும் ஒவ்வொருவர் வீட்டிலும் உரல் மற்றும் உலக்கையை இதற்காக பாதுகாத்து வருகின்றனர். வழக்கம்போல் பண்பாடு மாறாமல் வடகாசி அம்மன் கோயில் திருநாளை கொண்டாடுவதற்காக இந்தாண்டும் அருணாசலபுரம் கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivities ,girls , Rural women,Culture ,Temple Festival
× RELATED பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 90% தேர்ச்சி