×

திருப்புத்தூர் அருகே அன்றாடம் விபத்தை ஏற்படுத்தும் பட்டமங்கலம் - கல்லல் சாலை

* சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அடுத்த பட்டமங்கலம் வழியாக கல்லல் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அன்றாடம் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்திலிருந்து - கருங்குளம் விலக்கு, தெற்குதெரு வழியாக கல்லல் - மதகுபட்டிக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த இணைப்பு ரோடு பட்டமங்கலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரம் உள்ளது. இந்த ரோடு சுமார் 10 ஆண்டுகளுக்கும் முன் அமைக்கப்பட்டது.

திருப்புத்தூரிலிருந்து பட்டமங்கலம், கருங்குளம் விலக்கு, தெற்குதெரு, கணவாய்பட்டி, கொங்கராம்பட்டி, ஊடனேந்தல்பட்டி, தவசியேந்தல்பட்டி, கொட்டகுடி, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், கல்லல், மதகுபட்டி உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்ல இந்த சாலையின் வழியாக தான் செல்லவேண்டும். மேலும் கிராமத்தினர் இச்சாலை வழியே தான் சைக்கிள், டூவீலர் மற்றும் டவுன் பஸ்களில் செல்கின்றனர்.

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் சாலையில் உள்ள கற்கள் அனைத்தும் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
 வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் வருபவர்கள் சாலையில் வெளிச்சம் இல்லாததால் இருட்டில் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,accident ,Pattamangalam - Kallal ,Thiruppattur , thirupathur,Pattamangalam ,kallal
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...