×

டிக்கெட்டுகளில் மோடியின் படம் இடம்பெற்ற விவகாரம்: ரயில்வே, விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ்

புதுடெல்லி: டிக்கெட்டுகளில் மோடியின் படம் இடம்பெற்றது குறித்து விளக்கமளிக்க ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதியை கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த பிறகும் ரயில் டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்தது. இதேபோல், விமான போர்டிங் பாசிலும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் படம் இடம் பெற்றுள்ளது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சகத்துக்கும் கடந்த 27ம் தேதி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அதில், கடந்த 10ம் தேதியே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பிரதமரின் புகைப்படத்தை அகற்றாதது ஏன்? என 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்காக தமக்கு கொடுக்கப்பட்ட போர்டிங் பாசில் மோடி மற்றும் குஜராத் முதல்வரின் படம் இடம்பெற்றிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு 2வது முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் மோடி புகைப்படம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்று மாலைக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் டிக்கெட்டுகளை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக கடந்த வாரமே ரயில்வே துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,EC ,Railway and Aviation Ministry , Ticket, Modi, photo, railway, aviation, election commission, notices
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...