×

ஓடுதளம் செப்பனிடும் பணி முடிவடைவதால் நாளை முதல் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் வழக்கம் போல இயங்கும்

மும்பை : கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஓடுதளத்தை செப்பனிடும் பணி முடிவடைய இருப்பதால் நாளை முதல் சகாரில் உள்ள மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் வழக்கம் போல இயங்கும் என்று விமான நிலையத்தை பராமரிக்கும் மியால்(MIAL) என்ற மும்பை சர்வதேச விமானநிலைய பிரவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கடைசியாக 2009-10ம் ஆண்டு செப்பனிடப்பட்டது. மேலும் விமானங்களின் சக்கரங்களில் இருந்து வெளியேறும் ரப்பர் கழிவுகளும் தரையில் படிந்து ஓடுதளத்தை சேதப்படுத்தின. ஏர்பஸ் போன்ற இலகுரக விமானங்களின் சக்கரங்களில் இருந்து 5 கிலோ ரப்பர் ஓடுதளத்தில் படிகிறது. போயிங் விமானங்களின் சக்கரங்களில் இருந்து 10 கிலோ ரப்பரும், A380 ரக விமானங்களின் சக்கரத்தில் இருந்து 15 கிலோ ரப்பரும் ஓடுதளத்தில் படிந்து விடுகின்றன. இதனால் ஓடுதளம் பாதிக்கப்படுகிறது.

இதனால் ஓடுதளத்தில் படிந்துள்ள ரப்பரை அகற்றிவிட்டு புதிதாக தார் ஊற்றி செப்பனிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்களும் காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை 6 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.

இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பொதுவாக நாள் ஒன்றுக்கு மும்பை  விமான நிலையத்தில் 900 விமானங்கள் கையாளப்படுகிறது. ஆனால் செப்பனிடும் பணி  காரணமாக நாள்தோறும் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பை-டெல்லி வழித்தடத்தில் தினமும் 100 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் செப்பனிடும் பணி காரணமாக 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தினமும் சுமார் 50,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. நிலைமையை சமாளிக்க விமானங்கள் காலை 11.00  மணிக்கு முன்பாக அதிகாலையும் மாலை 5.00 மணிக்கு பின்னர், நள்ளிரவுக்கு பின்னரும் இயக்கப்பட்டன. இதனிடையே, ஓடுதளத்தில் படிந்திருந்த ரப்பர் அகற்றப்பட்டு 4 அங்குலம் தடிமத்துக்கு இரு அடுக்கு தார் போடப்பட்டது. இந்த பணி முடிவடையவிருப்பதால் 31ம் தேதிமுதல் அதாவது நாளை முதல் மும்பை விமான நிலையத்தில் வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flights ,Mumbai International Airport , Mumbai ,Mumbai Airport,runway work over,MIAL
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...