சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போலந்து அணியை பந்தாடியது இந்தியா: 10 கோல் போட்டு அசத்தல்

ஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 10-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது. மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 6 அணிகள் லீக் சுற்றில் மோதின. இந்திய அணி முதல் லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வென்றது. அடுத்து தென் கொரியாவுடன் நடந்த 2வது லீக் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசிய அணியுடன் மோதிய இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அடுத்து கனடா அணியுடன் மோதிய இந்தியா 7-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பைனல் வாய்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்து அணியை நேற்று எதிர்கொண்ட இந்தியா 10-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.

இந்திய வீரர்கள் வருண் (18வது, 25வது நிமிடம்), மன்தீப் (50வது, 51வது நிமிடம்), விவேக் (1’), சுமித் குமார் (7’), சுரேந்தர் (19’), சிம்ரன்ஜீத் (29’), நீலகண்டா (36’), அமித் (55வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். போலந்து அணியால் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்தியா 5 லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, 1 டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. தென் கொரியா (13 புள்ளி), மலேசியா (9), கனடா (6), ஜப்பான் (3), போலந்து (0) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்தன. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் கொரியா மோதுகின்றன. 3வது, 4வது இடத்துக்கு மலேசியா - கனடா அணிகளும், 5வது, 6வது இடத்துக்கு ஜப்பான் - போலந்து அணிகளும் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: