×

அது அந்தக்காலம் அள்ளிக்கொடுப்பதை அறிமுகப்படுத்திய காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி

காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதில் கர்நாடக மாநிலம்தான் முதலிடம் என்கிறார்கள். தமிழகமும் அதற்கு சளைத்ததல்ல. ஓட்டுக்கு காசு வீசும் பழக்கம் நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே இருந்திருக்கிறது. எப்போதும் பொதுத் தேர்தலில் காசு புழக்கம் இருப்பதை விட  இடைத் தேர்தலில் காசு புழக்கம் அதிக அளவில் இருக்கும்.  அதற்கு இடைத்தேர்தல் ஃபார்முலா  என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். அதில் திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு முன்னோடிகளாக காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்கள் இருந்துள்ளன.வட மாநில கொள்ளையர்களால்  கும்மிடிப்பூண்டி  எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்டதாலும், காஞ்சிபுரம் எம்எல்ஏ எஸ்.எஸ்.திருநாவுக்கரசு உடல் நலக்குறைவினால் இறந்ததாலும்  2005ல் இடைத் தேர்தல் வந்தது. ஆளுங்கட்சியான அதிமுக இரண்டு தொகுதியையும் கைப்பற்றிட துடித்தது. அதனால் தேர்தல் அறிவிப்பு வந்ததும் அமைச்சர்களை  2 தொகுதியிலும் இறக்கிவிட்டது. அவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கட்சி பிரமுகர்களை உற்சாகப்படுத்துவது,  சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனை என பிசியாக வலம் வந்தனர்.  ஆட்சி முடிய ஓராண்டே எஞ்சியிருந்த நிலையில் இடைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி 2006 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஊக்கமாக இருக்கும் என்று அரசியல்கட்சிகள் வேகம் காட்டின.

அதனால் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி  தொகுதிகளில் எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள் வலம் வந்துக் கொண்டிருப்பார்கள்.  சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை கண்டுக் கொள்ளவில்லை. எதிர்கட்சிகள் வழக்கம்போல் ஆவேச குற்றச்சாட்டுகளுடன் நிறுத்திக் கொண்டன.அதுவரை 10, 20 சில இடங்களில் 60, 70 ரூபாய் என வாக்காளர்களுக்கு கிள்ளி தரும் நிலைமை மாறியது காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்களில்தான். ஆம் அந்த தொகுதிகளில் முதல்முறையாக ஒவ்வொரு ஓட்டுக்கும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அள்ளி வீசப்பட்டன.இதை எதிர்பார்க்காத வாக்காளர்கள் வாயடைத்து போயினர். தேர்தல் ஆணையம், ‘ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை ’ என்றது. அந்த இடைத் தேர்தல்களுக்கு பிறகு நடந்த தேர்தல்களில் ஓட்டுக்கு வழங்கப்படும் கையூட்டுத் தொகை பல மடங்காக உயர்ந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanchipuram ,Gummidipoondi , A cash shell, Kancheepuram, Gummidipoondi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...