டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு; மது பாட்டில்கள், சிசிடிவி கேமரா எரிந்து சாம்பல்

ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைக்க முடியாத ஆத்திரத்தில் கொள்ளையர்கள் கடைக்கு தீ வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே தோவாளை சானல்கரையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த செந்தில்வேல், விஜயன், நாதன் ஜெஸ்டிஸ் ஆகிய 3 பேர் சூப்பர் வைசர்களாகவும், உதயகுமார், திருலோகசந்திரன், குமார், செந்தில் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். வழக்கம் போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர்.

இன்று அதிகாலை அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்ற சிலர், டாஸ்மாக் கடைக்குள் இருந்து புகை வருவதை கவனித்து அதிரச்சியடைந்தனர். உடனே தீயணைப்பு நிலையம் மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போலீசாரும் டாஸ்மாக் ஊழியர்களும் விரைந்தனர். டாஸ்மாக் கடைக்கு தீ வைத்ததில் இன்வெர்ட்டர், கண்காணிப்பு கேமரா, பிரீசர்கள் எரிந்து சாம்பலானது. ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தன. பெரும்பாலான மதுபாட்டில்கள் தீயில் கருகியுள்ளன.

மதுக்கடையின் பின்புறம் வயலை அறுத்து சேமித்து வைத்திருந்த வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடையின் சுவரில் உள்ள சிறிய காற்று துவாரம் வழியாக வைக்கோலை உள்ளே போட்டு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடையின் பூட்டை உடைக்க கும்பல் முயற்சித்துள்ளது தெரிந்தது. தோல்வி அடைந்ததால் கடைக்கு தீ வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் டாஸ்மாக் சரக்கு குடிக்கும் நோக்கில் வந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்களா? அல்லது கொள்ளை கும்பலா? என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேன்கனிக்கோட்டை அருகே கார்பெண்டர் வீட்டிற்கு தீ வைப்பு தேன்கனிக்கோட்டை,