×

தேங்காய் மட்டை விலை சரிவு : விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடங்களுக்கு அனுப்பப்படும் மஞ்சி விலை திடீர் குறைவால், தேங்காய் மட்டை விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில், விவசாயிகளின் பிரதான தொழிலாக தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் உற்பத்தியாகும் தேங்காயிலிருந்து பிரிக்கப்படும் மட்டை, மஞ்சாக மாற்றப்பட்டு அவை வெளியிடங்களுக்கு விற்பனைக்கு அனுப்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு உற்பத்தியாகும் மஞ்சில் சுமார் 70 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

கடந்த ஆண்டு ஜூனிலிருந்து பல மாதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால், டிசம்பர் மாதத்திலிருந்து தென்னையில் தேங்காய் காய்ப்புத்திறன் அதிகமானது. இதன் காரணமாக மஞ்சி உலர வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றதுடன், அதன் உற்பத்தி அதிகரிக்க துவங்கியது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகளில் மஞ்சி உற்பத்தி மேலும் அதிகமானது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சியின் விலை குறைந்தால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மஞ்சி உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேங்காயிலிருந்து பிரிக்கப்படும் தேங்காய்மட்டையின் விலையும் சரிவை நோக்கி செல்கிறது.    

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மஞ்சி ரூ.14 முதல் அதிகபட்சமாக ரூ.15.50 வரை விலைபோனது. மேலும் ஒரு தென்னை மட்டை ஒன்றுக்கு ரூ.2 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக, ஒரு கிலோ மஞ்சி ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.13.50க்கு என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் மட்டையின் விலையும் சரிந்துள்ளது. தற்போது ஒரு மட்டையின் விலை ரூ.1.50 முதல் ரூ.1.60 வரை மட்டுமே விற்பனையாகிறது. தற்போது மழை இல்லாததால், மஞ்சியை உலர வைத்து அதன் உற்பத்தியானது மேலும் அதிகரிக்க வேண்டிய உள்ளது. ஆனால், வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சியின் விலை திடீர் குறைவால், மட்டை விலையும் கடுமையாக சரிந்துள்ளது. மட்டை விலை பல மாதங்களுக்கு பிறகு தற்போது குறைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coconut bush, farmers, pain
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...